Published : 06 Sep 2014 10:35 AM
Last Updated : 06 Sep 2014 10:35 AM

குடி விளம்பரத்திற்கு ஒரு நகரம்!- அமெரிக்காவில் வினோதம்

நம்மில் பலர் குடி விளம்பரம் பார்த்திருப்போம். ஆனால் குடி விளம்பரத்திற்காக ஒரு நகரத்தையே வாடகைக்கு எடுத்த கதையை எங்கேனும் கேட்ட துண்டா? அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள க்ரெஸ்டட் பட் எனும் நகரம்தான் இந்த வினோதத்துக்கு ஆளாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல பீர் தயாரிப்பு நிறுவனம் அன்ஹியூசர் புஷ். இது தனது நிறுவனத் தயாரிப்பு பீர்களை விளம்பரம் செய்ய நினைத்தது. அதற்காக க்ரெஸ்டட் பட் நகரத்தைத் தேர்வு செய்தது.

இங்கு இந்த‌ வார இறுதியில் பீர் விளம்பரக் காட்சி தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காக வெளி நகரங்களில் இருந்து சுமார் 1,000 இளைஞர்களை இந்நகரத்துக்கு வரவழைத்துள்ளது அந்நிறுவனம். மேலும் விளம்பரத்திற்கு ஏற்றாற் போல ஆங்காங்கே 'செட்'களும் போடப்பட்டுள்ளன. தவிர, க்ரெஸ்டட் பட் எனும் பெயர் விளம்பரத்துக்காக 'வாட் எவர் யு.எஸ்.ஏ.' என்று மாற்றப்பட இருக்கிறது.

இந்த விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக, இந்நகர நிர்வாகத்துக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3 கோடி) கட்டணமாக வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகத்துக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் ரகசியமாக நடந்துள்ளது.

இதன் மூலம் இந்நகரத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், வருமானம் வளரும் என்று நிர்வாகம் சாக்குப்போக்குகள் சொன்னாலும், மக்களோ இந்த விளம்பர ஒப்பந்தம் கேவலமானது என்று கடுகடுக்கிறார்கள்,-நியுயார்க் டைம்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x