Last Updated : 24 Apr, 2019 08:10 AM

 

Published : 24 Apr 2019 08:10 AM
Last Updated : 24 Apr 2019 08:10 AM

தோனி பேசினார்; வாட்ஸன் முடித்தார்: மீண்டும் முதலிடத்தில் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ்க்கு பதிலடி

வாட்சஸின் எதிர்பாராத காட்டடி பேட்டிங்கால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

கடந்த லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸிடம் அடைந்த தோல்விக்கு இது சிஎஸ்கேவின் பதிலடியாக அமைந்தது.

 

இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் சிஎஸ்கே அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 11 போட்டிகளில் 8 ஆட்டங்களில் வெற்றியும்,3 ஆட்டங்களில் தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் சிஎஸ்கே உள்ளது.

 

சன்ரைசர்ஸ் அணி 10 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. வாட்சன், ரெய்னா போன்றவர்களையெல்லாம் இன்னும் ஆட விட்டுக்கொண்டிருந்தால் அந்த அணி எப்படி வெற்றி பெற முடியும்? ரெய்னாவுக்கெல்லாம் இடுப்புக்கு மேல் ஒரு ஏத்து ஏத்தினால் அவர் கொடியேத்தி விடுவார், ஆனால் அப்படி வீச பவுலர்கள் இல்லை என்பதே உண்மை. நன்றாகப் போட்டுப் போட்டுக் கொடுத்தனர் சன் ரைசர்ஸ் பவுலர்கள்.

 

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையி்ல் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

ஆட்டநாயகன்

 

இந்த ஆட்டத்தின் ஒட்டுமொத்த வெற்றியின் சூத்திரதாரி வாட்ஸன்தான். 53 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து(6சிக்ஸர், 9பவுண்டரி) 4 ரன்னில் சதத்தை தவறவிட்ட வாட்ஸனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வாட்ஸனின் அதிரடி ஆட்டம் ஏறக்குறைய கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டையைத்தான் நினைவுபடுத்தியது. (வாட்ஸன் 57பந்துகள் 117ரன்கள் சேர்த்தது).

 

வாட்ஸனின் காட்டடிக்கு சந்தீப் சர்மா (3.5ஓவர்கள் 54 ரன்கள்), ரஷித் கான்(4ஓவர்கள்44ரன்கள்) பலியானார்கள்.

 

தோனி சொன்னதை நிரூபித்த வாட்ஸன்

 

இந்த சீசனில் கடந்த 10 போட்டிகளாக வாட்ஸன் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்து சென்றிருந்தது கவனிக்கத்தக்கது, அதிகபட்சமாக 20 ரன்கள் வாட்ஸன் அடித்ததே பெரிதாக இருந்தது.

 

இதனால், ஏன் வாட்ஸனை அமர வைக்கக்கூடாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அனைத்து விமர்சனங்களுக்கும் தனது பேட்டிங்கால் பதில் அளித்து தான் ஒரு “மேட்ச் வின்னர்” என்பதை வாட்ஸன் நிரூபித்துவிட்டார்.

 

அதுமட்டுமல்லாமல், கடந்தமுறை ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேசிய கேப்டன் தோனி, “ டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் மேட்ச்வின்னர்கள். அவர் நிலைத்து விளைாடினால்தான் அடுத்துகளமிறங்கும் வீரர்களுக்கு நெருக்கடி இல்லாமல் இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். தோனியி்ன் வார்த்தையை கேட்டுக்கொண்ட வாட்ஸன் அதை கச்சிதமாக இந்த போட்டியில் செய்துவிட்டார்.

 

கேட்ச் நழுவல்

 

இந்த போட்டியில் முதல் ஓவரில் வாட்ஸன் ரன் ஏதும் எடுக்கவில்லை, 3 ஓவர்கள் வரை சிஎஸ்கே அணி மிகநிதானமாக விளையாடியது.வயதான வீரர்கள் எப்படி 175 ரன்களை சேஸிங் செய்யப் போகிறார்கள் என்ற கிண்டல் பேச்சு தமிழ் வர்ணனையில்கூட எழுந்தது. ஆனால், அனைத்தையும் 4-வது ஓவரில் இருந்து நொறுக்கித் தள்ளினார் வாட்ஸன். சன்ரைசர்ஸை சமாளி்க்க “நான் ஒருவனே போதும்” எனும் ரீதியில் வாட்ஸன் அடித்த ஷாட்கள் அனைத்தும் டாப்கிளாஸ்.

 

வாட்ஸன் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது, சந்தீப் சர்மா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஒரு கேட்சை நழுவவிட்டார். அந்த கேட்ச்சை நழுவவிட்டதற்கு மிகப்பெரிய விலையை அதன்பின் சன்ரைசர்ஸ் அணி வாட்ஸனிடம் கொடுக்க நேர்ந்தது.

 

வாட்ஸனிடம் வம்பு

 

புவனேஷ் குமார் பந்துவீச்சைத் தவிர மற்ற வீரர்கள் பந்துவீச்சை பிய்த்து எரிந்துவிட்டார் வாட்ஸன். குறிப்பாக வாட்ஸனிடம் வம்பு வைத்துக்கொண்ட ஆப்கன் வீரர் ரஷித் கானுக்கு நேற்று நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும். வாட்ஸனுடன் தோளுடன் இடித்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் ரஷித்கான் பந்துவீசினார். சிங்கத்தை உசுப்பிவிட்டதுபோல், அதன்பின் ரஷித்கான் பந்துவீச்சு வாட்ஸனால் வறுத்து எடுக்கப்பட்டது. இந்த சீசனில் அனைத்து அணிகளுடன் ரஷித்கான் 27 ரன்களுக்கு மேல் வழங்கியதில்லை, ஆனால் நேற்று 4ஓவர்கள் வீசி 44 ரன்களை வாரிவழங்கினார்.

 

பாவம் சந்தீப்

 

கடந்த ஆண்டு ஐபிஎல் பைனலிலும் சந்தீப் சர்மா பந்துவீச்சு வாட்ஸனால் நொறுக்கிஅள்ளப்பட்டது, நேற்றைய ஆட்டத்திலும் எந்த குறையும் இன்றி சந்தீப் சர்மாவின் பந்துவீச்சை விளாசித்தள்ளிவிட்டார் வாட்ஸன். சந்தீப்சர்மா 3.5 ஓவர்கள் வீசி 54ரன்கள் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

 

ஒட்டுமொத்தமாகவே இது சிஎஸ்கேவுக்கு கிடைத்த வெற்றி என்பதைக் காட்டிலும் வாட்ஸனுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் கூற வேண்டும்.

 

வாட்ஸ்ன் ஆட்டமிழந்தபின் வந்த ராயுடு, ஜாதவ் எளிதாக 15 ரன்களே சேர்த்திருக்க முடியும். இந்த 15ரன்களைச் சேர்க்க இருவரும் திணறினார்கள்.

 

ஆடுகளம் ஓகே

 

இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் குழிபிட்ச்தான் அமைக்கப்பட்டு இருந்தது, பலமுறை தோனியும் வருத்தம் தெரிவித்து பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்க முடியவில்லை என்று ஆதங்கம் தெரிவித்திருந்தார். அது இந்தப்போட்டியில் மாற்றப்பட்டது மகிழ்ச்சி.

 

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை ஹர்பஜன் சிங், தீபக் சாஹர் இருவரைத் தவிர மற்றவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நிலைத்தன்மையுடன் வீசவில்லை.

 

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை வார்னர், மணிஷ்பாண்டே 2-வது விக்கெட்டுக்கு அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த வீரர்கள் பயன்படுத்தவில்லை. இருவரும்களத்தில் இருந்தபோது ஓவருக்கு 10ரன்கள் வீதம் சேர்க்கப்பட்டது. வார்னர் ஆட்டமிழந்தபின் வந்த விஜய்சங்கரும் எதிர்பார்த்த அளவுக்கு ஷாட்களை அடிக்கவில்லை, மணிஷ் பாண்டே ஆட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது. விக்கெட்டுகள் கைவசம் இருந்து துணிந்து ஏன் ஆடவில்லை என்பது தெரியவில்லை. வார்னர் இருந்தவரை சன்ரைசர்ஸ் அணி ஸ்கோர் 190 ரன்களுக்கு மேல் செல்லும் என்று கணிக்கப்பட்டது, ஆனால், 175 ரன்களே சேர்க்க முடிந்தது.

 

கடைசிவரை சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்காகப் போராடினார்கள். ஏற்கனவே சந்தீப் சர்மா ஓவரை அடித்து நொறுக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு புவனேஷ்வர் நேற்று கடைசி ஓவரை மீண்டும் சந்தீப் சர்மாவை வீசச் செய்து தவறு செய்துவிட்டார். சகிப் அல்ஹசனுக்கு ஒரு ஓவரை நிறுத்திவைத்திருக்க வேண்டும். சந்தீப் சர்மாவின் கடைசி ஓவரில் ஜாதவ் அருமையான சிக்ஸர் அடித்து வெற்றியை எளிதாக்கிவிட்டார்.

 

விக்கெட் இழப்பு

 

176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. வாட்ஸன், டூப்பிளசி ஆட்டத்ைதத்தொடங்கினார். 2-ஓவர்கள் வரைஇருவரும் ரன் சேர்க்க திணறினார்கள். புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில்  டூப்பிளசி ரன் அவுட் முறையில் ஒருரன்னில் வெளிேயறினார். தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து சிஎஸ்கே தடுமாறியது.

 

அதிரடி ஆட்டம்

 

அடுத்து ரெய்னா களமிறங்கி, வாட்ஸனுடன் சேர்ந்தார். கலீல் அகமது வீசிய 5-வது ஓவரில் இருந்து வாட்ஸன் துணிச்சலாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கலீல் அகமது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார் வாட்ஸன்.

 

சந்தீப் சர்மா வீசிய 6-வது ஓவரில் 4பவுண்டரி, ஒருசிக்ஸர் விளாசி ரன்ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தினார் ரெய்னா. பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்தது.

 

வாட்ஸன் தாக்குதலுக்கு ரஷித்கானும் தப்பவில்லை. ரஷித்கான் வீசிய 8-வது ஓவரில் சிக்ஸர் பவுண்டரி விளாசினார் வாட்ஸன். சந்தீப்சர்மா வீசிய 9-வது ஓவரில் வாட்ஸனுக்கு ஒருகேட்சை பேர்ஸ்டோ தவறவிட்டார். ரஷித்கான் வீசிய 10-வது ஓவரில் ரெய்னா 38 ரன்கள் சேர்த்தநிலையில் பேர்ஸ்டோவால் ஸ்படெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 77 ரன்கள் சேர்த்தனர்.

 

அடுத்து ராயுடு களமிறங்கினார். ராயுடு நிதானம்காட்ட வாட்ஸனே பேட்டில் அனல் பறந்தது. சந்தீப் சர்மா வீசிய 12-வது ஓவரில்2பவுண்டரி, ஒருசிக்ஸரும், ரஷித்கான் வீசிய 14-வது ஓவரில் 2 பவுண்டரி, ஒருசிக்ஸரும் என வாட்ஸன் வெளுத்துவாங்கினார். 35 பந்துகளில் அரைசதம் அடித்தார் வாட்ஸன்.

 

சதத்தை தவறவிட்ட வாட்ஸன்

 

வாட்ஸனின் அதிரடியை கட்டுப்படுத்த சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. புவனேஷ்குமார் வீசிய 15-ஓவரில் 2 பவுண்டரி, ரஷித்கான் வீசிய 16-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என வாட்ஸன் நொறுக்கினார். சதத்தை நெருங்கிய வாட்ஸன், புவனேஷ்குமார் வீசிய 18-வது ஓவரில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 96 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ராயுடு,வாட்ஸன் 80 ரன்கள் சேர்த்தனர்.

 

மந்தமான ஆட்டம்

 

 160 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை சிஎஸ்க இழந்தது. அதன்பின் 16 ரன்களை அடிக்க ராயுடுவும், ஜாதவும் திணறினார்கள்.  இருவரும் மந்தமாக பேட் செய்தனர்.

 

 2 ஓவர்களுக்கு 13ரன்கள் தேவைப்பட்டநிலையில் 4 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய ஓவரில் முதல்பந்தில் ராயுடுஒரு ரன் எடுக்க, 2-வதுபந்தில் ஜாதவ் சிக்ஸர் விளாசி, 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் ராயுடு தேவையில்லாமல் தூக்கி அடித்து 21 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் ஜாதவ் ஒருரன் எடுத்து வெற்றியை உறுதிசெய்தார்.

 

சன்ரைசர்ஸ் தரப்பில் புவனேஷ்குமார், சந்தீப்சர்மா, ரஷித்கான் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினார்கள்.

 

வார்னர், பாண்டே கூட்டணி

 

முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் வார்னர், பேர்ஸ்டோ களமிறங்கினார்கள். ஹர்பஜன் வீசிய 2-வது ஓவரில் பேர்ஸ்டோ டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வார்னருடன், மணிஷ்பாண்டே சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பவர்ப்ளே ஓவரில் ஒருவிக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணி. பாண்டே 25பந்துகளிலும், வார்னர் 39 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். ஹர்பஜன் வீசிய 14-வது ஓவரில் வார்னர் 57 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 115 ரன்கள் சேர்த்தனர்.

 

ஏமாற்றம்

 

வார்னர் சென்றபின் சன்ரைசர்ஸ் அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. விஜய் சங்கர் 26ரன்களில் ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களிலும்,(3சிக்ஸர், 7பவுண்டரி), யூசுப்பதான் 5 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ்  அணி. சிஎஸ்கே தரப்பில் ஹர்பஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x