Last Updated : 14 Apr, 2019 04:26 PM

 

Published : 14 Apr 2019 04:26 PM
Last Updated : 14 Apr 2019 04:26 PM

தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு?-நாளை உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு: விஜய் சங்கர் கதி என்னாகும்?

இங்கிலாந்தில் வரும் மே மாத இறுதியில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி நாளை மும்பையில் தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்திக் தேர்வு செய்யப்படுவாரா அல்லது இளம் ரிஷப்பந்த் தேர்வு செய்யப்படுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

அதேபோல 4-வது பந்துவீச்சாளராக வேகப்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்படுவார் என்றால் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குரியாக இருக்கிறது.

ஒருவேளை மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் தேவை என்றால், ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் முன் நிற்கின்றன.

உலககக் கோப்பைப் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஏற்கனவே சூசகமாகக் கூறிவிட்டார்கள். ஆதலால், பெரிய அளவில் மாற்றம் இருக்கப் போவதில்லை என்கிற போதிலும் மேட்ச் வின்னர் எனச் சொல்லப்படும் வீரர்களை மிக முக்கியத்துவம் வாய்ந்த உலகக்கோப்பைப் போட்டிக்கு மிக அவசியம்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து வீரர்கள் நிச்சயம் தேர்வு செய்யப்போவதில்லை. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார்கள் என்று கூற முடியாது.

இப்போதுள்ள சூழலில் இந்திய அணிக்கு இருக்கும் முக்கியச் சிக்கல் 4-வது இடத்தில் எந்த வீரரைத் தேர்வு செய்வது, மாற்று ஓபனிங் பேட்ஸ்மேன் யாரைத் தேர்வு செய்வது என்பதுதான். அந்த வகையில் அம்பதி ராயுடு, அஜின்கயே ராஹனே, ஸ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் ஆகியோரின் பெயர்கள்தான் தீவிரமாக பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.

அம்பதி ராயுடுவுக்கும், ராகுலுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அவர்களால் 4-வது இடத்தில் நிலையாக நின்று விளையாட முடியவில்லை. அதிலும் ராயுடுவுக்கு பல வாய்ப்புகள் வழங்கிய நிலையில், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் ராயுடு தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

கே.எல்.ராகுலைப் பொருத்தவரை நடுவரிசை மட்டுமல்லாது, தொடக்க ஆட்டக்காரராகக் கூட களமிறங்கும் திறமை இருப்பதால், அவரை மாற்று தொடக்க ஆட்டக்காரராக வைத்துக்கொள்ள அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. தேவைப்பட்டால், 4-வது வீரராகவும் களமிறக்கப்படலாம். ஆனால், விளையாடும் 11பேர் கொண்ட அணியில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான்.

டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் விஜய் சங்கரை 4-வது இடத்தில் களமிறங்கி சோதித்துப் பார்த்ததில் ஓரளவுக்கு தேறிவிட்டார் என்றே கூறலாம், நன்றாகவும் அடித்தும் ஆடினார். ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக பேட் செய்தும் வருகிறார் தமிழக வீரர் விஜய் சங்கர். அணியில் ஹர்திக் பாண்டியா தவிர்த்து கூடுதலாக ஆல்ரவுண்டர் தேவை எனும் பட்சத்தில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு தரப்படலாம்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக ஸ்விங்கு பந்துவீச்சுக்கும், மிதவேகத்துக்கும் அதிகமாக ஒத்துழைக்கும் என்பதால், விஜய் சங்கர் பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்படலாம்.

கே.எல்.ராகுல் எந்த இடத்திலும் இறங்கி அடித்து விளையாடக் கூடியவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சான்று அளித்துள்ளார். அதேபோல, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், நடுவரிசைக்கு பலப்படுத்த சஞ்சு சாம்ஸனை தேர்வு செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அனுபவம் வாய்ந்தவரான ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர் பெயரும் நடுவரிசைக்கு அதிகமாக ஆலோசிக்கப்படும். சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் எல்லாம் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாகச் செயல்பட்டும் அவரை தேர்வாளர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை. அதேசமயம், ரஹானேவுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தும் அதை அவரால் தக்கவைக்க முடியவில்லை. கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தவிர்த்து ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் அனுபவமான வீரர் தேவை எனும் பட்சத்தில் ரஹானே பெயர் பரிசீலிக்கப்படும்.

மற்றவகையில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, 3-வது வீரர் விராட் கோலி, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் தேர்வில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்கப் போவதில்லை.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விஷயம், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதுதான். ரிஷப் பந்த் அணிக்கு ஒரு துருப்புச் சீட்டு, எப்போது அடித்து விளையாடுவார், எப்போது ஆட்டமிழப்பார் என்பதை கணிக்க முடியாது. அதேசமயம், சர்வதேச போட்டிகளில் விளையாடி அதிகமான அனுபவம் இல்லாவிட்டாலும், இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளார் ரிஷப் பந்த். அது அவருக்கு சாதகமாக இருக்கிறது. ஐபிஎல் போட்டியிலும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப் பந்தின் பேட்டிங் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அனுபவம், களத்தில் பொறுமை, மேட்ச் வின்னர் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படலாம். இந்த இருவரின் பெயரும் நாளை தீவிரமாக பரிசீலிக்கப்படும்.

சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் இருவரின் இடம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் தேவை என்று அணி நிர்வாகம், கேப்டன் நினைக்கும் பட்சத்தில் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பேட்டிங்கிலும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஜடேஜா விளையாடக் கூடியவர் என்பதால், அவர் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்ய வாய்ப்பு உண்டு.

வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் உறுதியாகிவிடும். சர்வதேச அளவில் மிரட்டல் விடுக்கும் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வருகிறார். ஷமின் துல்லியத்தன்மை, வேகம் நிறைந்த பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இங்கிலாந்து ஆடுகளத்துக்கு ஷமியின் பந்துவீச்சு நன்றாக எடுபடும்.

ரிசர்வ் வேகப்பந்துவீச்சாளர்களா உமேஷ் யாதவ், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்படும். இதில் கலீல் அகமது சர்வதேச போட்டிகளில் அனுபவம் இல்லாதவர், நவ்தீப் சைனி சர்வதேச அனுபவம் இல்லாவிட்டாலும், ஐபிஎல் போட்டிகளில் நல்ல வேகத்தை அளித்து, துல்லியமாக வீசக்கூடியவராக இருக்கிறார், தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆதால், நாளை உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தேச 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி(கேப்டன்), எம்எஸ் தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஹர்திக்  பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x