Last Updated : 26 Mar, 2019 11:32 AM

 

Published : 26 Mar 2019 11:32 AM
Last Updated : 26 Mar 2019 11:32 AM

அஸ்வின் செயலே எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்திவிட்டது: ராஜஸ்தான் பயிற்சியாளர் விளாசல்

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல்பாடு, அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிக்காட்டி விட்டது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பேடி அப்டன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

12-வது ஐபிஎல் போட்டியின் 5-வது லீக் ஆட்டம்  ஜெய்பூரில் நேற்று நடந்தது.  இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

இந்தபோட்டியில் 13-வது ஓவரின் போது ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை 'மன்கட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்தது தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. பட்லர் ஆட்டமிழந்தபின் ராஜஸ்தான் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது பரிதாபமாக தோல்வி அடைந்தனர்.

இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பேடி அப்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:

2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது, இந்திய அணியின் மனக்கட்டுப்பாட்டு பயிற்சியாளராக  இருந்தார். அப்போது இருந்தே அஸ்வின் குறித்து அப்டனுக்கு தெரியும் என்பதால், விளாசிவிட்டார். 

பேடி அப்டன் கூறியதாவது:

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லரை மன்கட் அவுட் செய்த அஸ்வின் செய்த செயல், அவர் எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்திவிட்டது. அஸ்வினின் செயல்பாடுகள் இன்று இரவுமுழுவதும் அவருக்காகவும் அவரின் அணிக்காகவும் பேசப்படலாம். நான் அவர்களின் கண்களைப் பார்த்தபோது என்னிடம் பேசவில்லை.

இந்த விவகாரத்தை நான் ஐபிஎல் ரசிகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதுபோன்ற செயல்களை ரசிகர்கள் பார்க்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டைச் சார்ந்தவர்களும், அஸ்வினின் செயல்பாடுகள் குறித்து தீர்மானித்துக்கொள்ளட்டும்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இங்கு தரமான கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம், ரசிகர்களை உற்சாகப்படுத்தி, மக்களுக்கும், இந்த விளையாட்டை விரும்பும் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறோம்.

இதுபோன்ற நேரங்களில் எங்கள் வீரர்கள் ஒழுக்கம் காத்து, அமைதியாக இருந்தது கிரிக்கெட்டின் கண்ணியத்தை உயர்த்திவிட்டது. கடைசி 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தது தோல்விக்கு முக்கியக்காரணம்.

ஐசிசி விதிகள்படி செயல்பட்டேன் என்று அஸ்வின் கூறுகிறார். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், விதிகள், விளையாட்டின் ஸ்பிரிட் ஆகியவை இரண்டும் வெவ்வேறானவே. ஏராளமான அணிகள் விதிகள் விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை மற்ற அணிகளாவது, விளையாட்டின் ஸ்பிரிட்டை உணர்ந்து விளையாடுவார்கள் என நம்புகிறோம். நாம் இங்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அழகான கிரிக்கெட்டை விளையாடி,ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காத்தான்.

இவ்வாறு அப்டன் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x