Published : 27 Mar 2019 01:38 PM
Last Updated : 27 Mar 2019 01:38 PM

சிஎஸ்கே 60 வயதினர் ஆடும் அணியல்ல: சிறந்த கேப்டனை வைத்திருக்கிறோம்:  பிராவோ ஆவேசம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் 60 வயதை அடைந்தவர்கள் அல்ல, வயதின் அடிப்படையில் திறமையை நிர்ணயிக்காமல், ஸ்மார்ட்டாக விளையாடுவதை கவனிக்க வேண்டும் என்று டிவைன்  பிராவோ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த 12-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதில் சிறப்பாகப் பந்துவீசிய பிராவோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியில் வெற்றிக்குப் பின் பிராவோவிடம், சிஎஸ்கே அணியில் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் இருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சற்று கோபமடைந்து ஆவேசத்துடன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

எங்களுடைய வயதைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். நீங்கள் கூட கூகுளில் தேடிப்பாருங்கள் பார்க்கலாம். நாங்கள்  வயது நிரம்பியவர்கள் அல்ல. சிஎஸ்கே அணியிலும் 60 வயதுடையவர்களைக் கொண்ட அணி அல்ல. எங்கள் அணியில் 30,32, 35 வயதுகளில் இருக்கும் வீரர்கள்கள்தான் இருக்கிறார்கள். இன்னும் நாங்கள் இளமையுடன் இருக்கிறோம். எங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து, அதிகமான அனுபவங்களோடு இருக்கிறோம்.

எந்த விளையாட்டு, எந்த போட்டித் தொடராக இருந்தாலும், அனுபவத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது. எங்களுடைய  பலவீனம் என் என்பது எங்களுக்குத் தெரியும். மிகவும் ஸ்மார்ட்டாக விளையாடுகிறோம். உலகின் சிறந்த கேப்டனால், நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். அடிக்கடி தோனி எங்களிடம் நினைவுபடுத்துவது , நாம் வேகமான அணி அல்ல, ஆனால், ஸ்மார்ட்டான அணி என்று கூறுவார். சூழ்நிலை அறிந்து, சூழலுக்கு ஏற்றார்போல் திட்டமிட்டு விளையாடுவோம்.

நாங்கள் எந்தவிதமான திட்டமிடலும் செய்யமாட்டோம், அணியில் ஆலோசனைக் கூட்டம் இல்லை.பயிற்சி முடித்ததும் களத்துக்குவந்துவிடுவோம். தோனிக்கு தனி ஸ்டைல் இருக்கு, ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஸ்டையில் இருக்கிறது. சூழலை கவனமாக உற்றுநோக்கி, சூழலுக்கு ஏற்றார்போல் விளையாடுகிறோம். அதனால்தான் அனுபவம் எங்களுக்கு வந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், டி20 விளையாடுவது கடினமானது, மிகவும் சிரமம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடதபோது, நம்முடைய திறமையை நாம் கணிக்க முடியாது, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடினால் மட்டுமே நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அறிய முடியும்.

நான் ஏற்கனவே ஓய்வு பெற்றாலும், சுனில் நரேன், பொலார்ட் போன்று அல்ல. அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளயைடுவதில்லை. ஆனால், நான் பெரும்பாலான நாடுகளில் நடக்கும் லீக்போட்டிகளில் விளையாடுகிறேன். தொடர்ந்து திறமையை வளர்த்து வருகிறேன். ஆதலால், போட்டிகள் வரும்போது, முடிந்த அளவு பங்கேற்று திறமையை வெளிப்படுத்துகிறேன்.

இவ்வாரு பிராவோ தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x