Published : 22 Mar 2019 09:40 PM
Last Updated : 22 Mar 2019 09:40 PM

ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுகுறித்துக் கவலையில்லை: கம்பீருக்கு கோலி பதிலடி

இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் கேப்டன்சியில் பலசாதனைகளை நிகழ்த்தியதற்காக கொண்டாடப்படுபவர் என்றாலும் இன்னமும் அவர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லவில்லை என்ற விமர்சனங்கள் சிறிது காலமாக அவர் மீது வலம் வந்து கொண்டிருக்கின்றன.

 

குறிப்பாக, தோனி, ரோஹித் சர்மாதான் பெரிய கேப்டன்கள், கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக நீடிப்பது அவரது அதிர்ஷ்டம் என்று சாடியிருந்தார்.

 

ஆனால் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பைக் கிளப்புகிறது என்று கூறுவது தவறு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று இந்தக் கருத்துகளை ஊதிவிட்டுள்ளார் விராட் கோலி.  இது கம்பீருக்கான பதிலடி என்றே தெரிகிறது.

 

நாளை போட்டி தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, “நிச்சயம் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம். நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன், ஆனால் ஐபிஎல் கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அது பற்றி கவலையில்லை என்றே கூறுவேன்.

 

அளவுகோல்களை நீங்கள் நிர்ணயிக்க முடியாது. நான் எப்பொதெல்லாம், எங்கெல்லாம் ஆடுகிறேனோ சிறப்பாக ஆடுவதுதான் என் வேலை. எல்லா கோப்பைகளையும் வெல்ல ஆசைதான், ஆனால் பல வேளைகளில் அது நடப்பதில்லை. நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்துப்பார்க்க வேண்டும். அழுத்த சூழ்நிலைகளில் மோசமான முடிவுகளை எடுத்ததால்தான் தோல்விகள் ஏற்பட்டன.

 

வெளியிலிருந்து பார்ப்பவர்கள் போல் நான் செயல்பட்டால் 5 ஆட்டங்களுக்கு மேல் நான் தாங்க மாட்டேன். நான் வீட்டில்தான் இருக்க வேண்டும். சிலர் இது பற்றி பேசுவது எனக்கு தெரிகிறது, என்னைப் பற்றி பேசும் வாய்ப்பை அவர்கள் இறுகப் பற்றிக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கென்று பொறுப்பு உள்ளது, கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானதுதான், இதனைச் சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.

 

கோப்பையை வெல்லவில்லை என்றால் அது எதார்த்தம். அதற்கு சாக்குபோக்கை நான் கூறவில்லை. 5 அரையிறுதிகளில் ஆடியுள்ளோம் என்றால் நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ள அணிதான். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிதான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனைத் தாண்டியும் செல்லலாம்.” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x