Published : 08 Mar 2019 10:21 PM
Last Updated : 08 Mar 2019 10:21 PM

அரிதாக வீணான விரட்டல் மன்னன் விராட் கோலியின்  சதம்: கிடுக்கிப் பிடி பந்து வீச்சில் இந்திய பேட்டிங் பலவீனத்தை அம்பலப்படுத்தி ஆஸி. வெற்றி

ராஞ்சியில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் வாழ்வா சாவா என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விராட் கோலியின் மிகப்பிரமாதமான சதத்தையும் மீறி 313 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் தங்கள் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

 

314 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை பல்லிளித்தது. விராட் கோலி மட்டுமே ‘நான் தான் கிங்’ என்றவாறு ஆடி 95 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 123 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நின்று கொண்டிருந்தார், ஆனால் கடைசியில் ஆடம் ஸாம்ப்பா பந்தில் பவுல்டு ஆகி வெளியேற இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

 

இன்றும் கோலி, தோனி, ஜாதவ் விக்கெட்டுகளை ஸாம்ப்பா கைப்பற்றி 70 ரன்கள் கொடுத்தாலும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி எந்தப் போட்டியாக இருந்தாலும் விக்கெட்டுகளே போட்டியை வெல்லும் என்பதை நிரூபித்தார். கமின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் மிகச்சிக்கனமாக வீசியதோடு தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், முன்னதாக சதம் கண்ட கவாஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

ரன்களைப் பெரிய அளவில் குவித்தால் இந்த இந்தியப் பேட்டிங் பல்லிளிக்கும் என்று நாம் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம், அது இன்று உண்மையானது, அதே போல் பெரிய இலக்குகளை இப்போதைய தோனி விரட்ட முடியாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் அதுவும் நிரூபணமானது. அதே போல் நல்ல பவுலிங்குக்கு எதிராக அம்பாதி ராயுடுவின் பேட்டிங் திறமைகள் கேள்விக்குறியே என்றும் கூறினோம் அதுவும் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

விராட் கோலியின் 41வது சதமாகும் இது விரட்டும் போது 25வது சதம். விரட்டலில் வெற்றி பெறாத 4வது சதமாகும் இது.  டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது, இந்திய விரட்டல் பலத்தை நம்பியல்ல, பனிப்பொழிவை நம்பி என்று தெரிகிறது, ஆனால் பனிப்பொழிவு இல்லை. ஷிகர் தவண் 1 ரன்னில் திருந்தாத அதே ஷாட்டை ஆடி ரிச்சர்ட்சனிடம் ஆட்டமிழந்தார்.

 

ரோஹித் சர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து கமின்ஸின் பவுன்ஸ் குறைவான பந்தில் பின் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். நடுவர் அவுட் தரவில்லை ரிவியூவில் அவுட்.

 

அம்பதி ராயுடு உள்ளே வந்த பந்தை தவறான லைனில் ஆடியதால் பந்து இடையில் புகுந்து பவுல்டு ஆனது, 2 ரன்னில் வெளியேறினார். மிக அருமையான பந்து ராயுடுவுக்கு கொஞ்சம் அதிகம்தான் இந்திஆ 27/3 என்று ஆனது.

 

பலத்த எதிர்பார்ப்புடன் கோலியுடன் தோனி இணைந்து ஸ்கோரை 86 ரன்களுக்கு உயர்த்தினர். தோனி 42 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் நேதன் லயன் பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடித்து 26 ரன்களில் ஸாம்ப்பாவை அடிக்கப் போய் ஸ்டம்புகளை இழந்தார். அது ஒரு நல்ல ஸ்ட்ரோக்கும் அல்ல, ஒரு அனுபவ வீரர் ஆடும் ஸ்ட்ரோக்கும் அல்ல.

 

கோலியும் ஜாதவ்வும் ஸ்கோரை 174 க்கு எடுத்துச் சென்றனர். அப்போது ஸாம்ப்பா, ஜாதவ்வை (26 ரன்கள் 39 பந்து) வீழ்த்தினார். கோலி ஆட்டத்தின் மெருக் கூடிக்கொண்டே சென்றது, ஆனால் 98 ரன்களில் இருந்த போது மேக்ஸ்வெல் பந்தில் விக்கெட் கீப்பர் கேரி கேட்சை விட்டார்.கோலி தன் 41வது சதத்தை எடுத்தார், இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆகும், ஏனெனில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் கோலி இருக்கும் வரை வெற்றி பெறத் தேவைப்படும் ரன் விகிதம் 8 ரன்களுக்குக் கீழேயே வைத்திருந்தார், அவ்வப்போது அனாயாசமான பவுண்டரிகளை ஓவருக்கு ஓவர் அடித்து வந்தார். இவரும் விஜய் சங்கரும் மீண்டும் இணைந்து 6 ஓவர்களில் 45 ரன்களைச் சேர்த்தனர் அப்போது விராட் கோலி 123 ரன்களில் ஸாம்பா பந்தில் பவுல்டு ஆனார்.

 

இந்திய அணிக்கு 75 பந்துகளில் 95 ரன்கள் தேவையாக இருந்தது. விஜய் சங்கர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து லயன் பந்தை ஒரு சுற்று சுற்றினார் நேராக கையில் போய் உட்கார்ந்தது.  ஜடேஜா (24), குல்தீப் யாதவ் (10), ஷமி (8) ஆகியோர் ரிச்சர்ட்சன், கமின்ஸ் ஆகியோரிடம் சடுதியில் வெளியேற கோலி அவுட் ஆகும் போது 38வது ஓவரில் 219 என்று இருந்த ஸ்கோரிலிருந்து 281 வரைதான் வர முடிந்தது. 48.2 ஓவர்களில் ஆட்டமிழந்தது.

 

300 ரன்களுக்கும் மேல் எந்த அணி அடித்தாலும் இந்த இந்திய அணியில் விராட் கோலியை வீழ்த்தி விட்டால் கதை முடிந்தது என்பது இந்தப் போட்டி மூலம் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x