Published : 14 Mar 2019 11:22 AM
Last Updated : 14 Mar 2019 11:22 AM

இந்த இந்திய அணியில் தோனியைச் சேர்த்தாலும் கூட ஒருபோதும் வலுவாகி விடாது : கோலியை மறுக்கும் கம்பீர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-2 என்று இந்திய அணி இழந்ததையடுத்து இந்திய அணியின் உலகக்கோப்பைத் தயாரிப்புகள் பற்றி கேள்வி எழுந்துள்ளது, அணிச்சேர்க்கை அணிச்சேர்க்கை என்று கூறி நிலையான ஒரு அணியை உருவாக்காமல் அணியை மாற்றி மாற்றி எந்த வீரர் மீதும் நம்பிக்கையில்லாத ஒரு சூழலை உருவாக்கியதற்காக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, சஞ்சய் பாங்கர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் கம்பீரும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன் டாஸில் தோற்ற விராட் கோலி, “இன்று விளையாடும் அணி ஏறக்குறைய உலகக்கோப்பையில் விளையாடும் அணியாக இருக்கும், அணியில் சமச்சீர் தன்மையைக் கண்டுபிடித்துக் கொள்ளவிருக்கிறோம்” என்றார்.

 

இந்த அணியில் தோனி, ஹர்திக் பாண்டியா வந்து சேர்வார்கள். மற்ற மாற்றங்கள் இருக்காது, ஒரேயொரு இடம் பற்றிய கேள்விதான் இருக்கிறது என்று ஆட்டம் முடிந்தவுடன் விராட் கோலி நேற்று தெரிவித்தார்.

 

இந்நிலையில் இது இந்திய அணியின் சிறந்த லெவன் கிடையாது, அதுவும் உலகக்கோப்பைக்கு நோ.. நோ என்று கம்பீர் மறுப்புக் கருத்து தெரிவித்துள்ளார்.

 

“உலகக்கோப்பை அணி விவரம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல் பிறகு உலகக்கோப்பைதான் ஆகவே அணியில் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. அணி மீது சந்தேகமில்லை. ஆனால் இந்த அணி நிச்சயம் உலகக்கோப்பைக்கான சிறந்த இந்திய அணியாக இருக்க முடியாது என்று உத்தரவாதமாகக் கூறுகிறேன்.

 

விராட் கோலி இந்தியாவின் உலகக்கோப்பை அணி இதுவாகவிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த லெவன் நிச்சயம் நம்பிக்கையளிப்பதாக இல்லை. தோனியை இந்த அணியில் சேர்த்தாலும் கூட இந்த பிளேயிங் லெவனில் எந்த ஒரு ஆழமும் ஏற்பட்டு விடப்போவதில்லை” என்று விராட் கோலி மீதான தன் விமர்சனத்தை முதன் முதலில் கூறும் வீரராக கம்பீர் திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x