Last Updated : 16 Mar, 2019 04:35 PM

 

Published : 16 Mar 2019 04:35 PM
Last Updated : 16 Mar 2019 04:35 PM

தோனி மட்டும் இல்லைன்னா...என் வாழ்க்கை: இசாந்த் சர்மா உருக்கம்

மகி பாய் (மகேந்திர சிங் தோனி) மட்டும் இல்லாவிட்டால், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை எப்போதோ அஸ்தமித்துப் போய் இருக்கும். எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் மகி பாய் (தோனி) என்று இசாந்த் சர்மா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இசாந்த் சர்மா. ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, நியூஸிலாந்து தொடர்களில் பல வெற்றிகளைப் பெற இசாந்த் சர்மாவின் வேகப்பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணம் என்றால் மிகையாகாது.

ஒருநாள் போட்டியில் இடம் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வந்த இசாந்த் சர்மா திடீரென அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் அணியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். இன்னும் ஒருவாரத்தில் ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இசாந்த் சர்மா இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணியில் தனக்கு மிகப்பெரிய இடைவெளி கிடைத்தததையும், மீண்டும் அணிக்குள் வந்தது எப்படி என்பது குறித்தும் இசாந்த் சர்மா உருக்கமாகப் பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக இசாந்த் சர்மா கூறியதாவது:

''என்னைப் பற்றிய கணிப்புகள் எல்லாம் மாறினாலும் கூட, நான் தோனிக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஏனென்றால், அணியின் கேப்டன் என்ற முறையில் மகி பாய் (தோனி) பலமுறை என்னைக் காப்பாற்றியுள்ளார்.

என்னை அணியில்  இருந்து நீக்குவதற்கு பலமுறை நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன, அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பும், வாழ்வும் அளித்து என்னை ஆளாக்கியவர் தோனி. அவர் மட்டும் இல்லாவிட்டால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்திருக்கும்.

தோனிக்குப் பின் கேப்டன் பொறுப்பேற்ற விராட் கோலி என்னிடம் வந்து, நீங்கள் சோர்வடைந்திருக்கீறீர்கள், ஆனாலும், மூத்த வீரர் என்கிற முறையில் உங்களின் சேவை அணிக்குத் தேவை என்று தக்கவைத்தார்.

முன்னதாக, நான் பந்து வீசுவதை மட்டும் செய்திருந்தேன். ஆனால், இப்பந்து பந்து வீசுவது மட்டும் வேலையல்ல, விக்கெட்டுகளையும் வீழ்த்தும் திறனைக் கற்றிருக்கிறேன். விக்கெட் வீழ்த்தும் திறன்தான் பந்துவீச்சாளரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.

ஆனால் அணியில் இடம் பெறாதது குறித்து இதுவரை யாரிடமும் ஏன் என்னை அணியில் சேர்க்கவில்லை எனக் கேட்டதில்லை. என்னைத் தேர்வு செய்யாவிட்டால், தவறு என் மீது இருக்கிறது. அந்தத் தவறைத் திருத்திக்கொள்ள முயன்றேன். தீவிரமாகப் பயிற்சி எடுத்தேன். என் பந்து வீச்சில் பல்வேறு திருத்தங்களைச் செய்து, என்னைச் செதுக்கியவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கில்லெஸ்பி. அவரை மறக்க முடியாது.

அவர் அளித்த பயிற்சியால்தான் டெஸ்ட் போட்டியில் 16 நாட்களில் என்னால் 300 ஓவர்கள் வீச முடிந்தது. 4 போட்டிகளில் மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினேன்''.

இவ்வாறு இசாந்த் சர்மா தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x