Published : 30 Mar 2019 08:53 PM
Last Updated : 30 Mar 2019 08:53 PM

ஒரு வழியாக பேட்டிங்கை கண்டுபிடித்துக் கொண்ட  கே.எல்.ராகுல்: போதிய இலக்கை நிர்ணயிக்காததால் மும்பையை வீழ்த்தியது கிங்ஸ் லெவன்

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 9வது போட்டியில் கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸை எளிதாக வென்று தன் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

 

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் முதல் 10 ஓவர்களில் எடுத்த 91 ரன்கள் அடித்தளத்தை கோட்டை விட்டு அடுத்த 10 ஓவர்களில் 85 ரன்களையே எடுத்து 176 ரன்களுக்கு 7 விக்கெட் என்று முடிந்தது, தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணி 177/2 என்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

கே.எல்.ராகுல் முதலில் கொஞ்சம் தடுமாறினார், கள இடைவெளிகளை அவரால் சரியாக ஊடுருவ முடியவில்லை பிறகு செட்டில் ஆகி 57 பந்துகளில் 7 நான்குகள் 4 ஆறுகள் என்று 71 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் இவருடன் டேவிட் மில்லர் 10 பந்துகளில் 15 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

முன்னதாக கிறிஸ் கெய்ல் முதல் 2 ஓவர்களில் ஒரு பவுண்டரியையே அடித்திருந்தார். 6 ஓட்டம் இல்லாத பந்துகளையும் கெய்ல் விட்டார். ஆனால் மிட்செல் மெக்லினாகன் தனது 2வது ஓவர், இன்னிங்சின் 3வது ஓவருக்கு வந்த போது கிறிஸ் கெய்ல் அவரை 2 முறை ஆறுகளுக்குப் பறக்கவிட்டார். ராகுல், பும்ராவை வெட்டி ஆடி ஒரு 4 ஓட்டங்களைச் சேர்க்க மலிங்கா வீச்சில் 2 நான்குகளை கெய்ல் விளாசினார்.  மெதுவாக ஆடினாலும் முதல் 6 ஓவர்களில் கிங்ஸ் லெவன் அணி 38 ரன்களை எடுத்ததில் யாரும் ஆட்டமிழக்கவில்லை என்பது முக்கியமானது.

 

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா வந்தார் அவர் வீச்சில் கெய்ல் 2 முறை ஆறுகளுக்குப் பறக்க விட்டார்.  சரி கெய்ல் முடிவு கட்டிவிட்டாரென்று நினைத்த போது குருணால் பாண்டியா பந்தையும் ஆறுக்குத் தூக்க முயன்று எல்லைக்கோட்டருகே ஹர்திக் பாண்டியாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

ராகுல் தன் பார்முக்காக ஆடிவந்த நிலையில் மயங்க் அகர்வால் மிகச்சிறப்பாக ஆடி 21 பந்துகளில் 43 ஓட்டங்களை 4 நான்குகள் 2 ஆறுகளுடன் எடுக்க ராகுலும், அகர்வாலும் 60 ஓட்டங்களுக்கான கூட்டணி அமைத்தனர். குருணால் பாண்டியா,மயங்க் மார்க்கண்டே ஆகியோரை ஆறு ஓட்டங்களுக்கு இருமுறை எல்லைகோட்டைக் கடந்து தூக்கி அடித்தார். மேலும் அடிக்க முனைந்த போது குருணால் பாண்டியா பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

தேவைப்படும் ஓட்ட விகிதம் பெரிய அளவில் சென்று விடாவிட்டாலும் கடைசி 6 ஓவர்களில் 56 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராகுல் தேர்ட் மேன் திசையில் ஒரு ஆறு வெளுத்தார்.  இருவரும் மேலும் சேதம் இல்லாமல் 177/2 என்று கிங்ஸ் லெவன் அணியை பாதுகாப்பாக வெற்றி பெற வைத்தனர்.

 

நல்ல தொடக்கத்தை விரயம் செய்த மும்பை இந்தியன்ஸ், முருகன் அஸ்வின் அபாரம்

 

வருண் சக்ரவர்த்திக்குப் பதிலாக கிங்ஸ் லெவன் அணியில் சேர்க்கப்பட்ட முருகன் அஸ்வினும், ரவிச்சந்திரன் அஸ்வினும் சிக்கனம் காட்டினர், முருகன் அஸ்வின் 2 முக்கிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். சூரிய குமார் யாதவ்வை 11 ஓட்டங்களிலும் அபாய வீரர் யுவராஜ் சிங்கை 18 ஓட்டங்களிலும் முருகன் அஸ்வின் காலி செய்தார்.  ரோஹித் சர்மா 18 பந்துகளில் 5 நான்குகளுடன் 32 ஓட்டங்கள் பெற்ற நிலையில் விலோயன் பந்தில் விக்கெட் முன் கால்காப்பு வந்து பந்து பட்டதால் அவுட் ஆனார். ஆனால் இதை அவர் சீராய்வுக்கு அனுப்பியிருக்கலாம் அப்படி அனுப்பியிருந்தால் அது ஆட்டமிழக்கக் கூடிய பந்தாக இருந்திருக்காது ஏனெனில் பந்து வெளியே செல்வதாகத்தான் தெரிந்தது, டி காக் மறு ஆய்வு செய்வது பற்றி ரோஹித் சர்மாவுக்கு உடன்பாடான ஆலோசனையை வழங்கவில்லை.

 

குவிண்டன் டி காக் அதிரடியில் 10 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பெற்று நல்ல நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி  டி காக் (60), யுவராஜ் சிங் (18), கெய்ரன் போலார்ட் (7) ஆகியோரை ஆட்டமிழந்து 17.1 ஒவரில் 146/5 என்று தடுமாறியது, ஆனால் ஹர்திக் பாண்டியா சிலபல அபாரமான மட்டை வீச்சில் 19 பந்துகளில் 3  நான்குகள் ஒரு ஆறு என்று 31 ஓட்டங்களையும் குருணால் பாண்டியா 10 ஓட்டங்களையும் எடுக்க 176/7 என்று முடிந்தது.

 

முகமது ஷமி தொடர்ச்சியாக 2வது முறையாக 4 ஒவர்களில் 40 ஓட்டங்களுக்கு மேல் வழங்கி சொதப்பியுள்ளார்.  ஆட்ட நாயகனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x