Published : 27 Feb 2019 05:37 PM
Last Updated : 27 Feb 2019 05:37 PM

ஒருநாள் போட்டிகளில் எனக்கு சீராக வாய்ப்பு வழங்க நான் தகுதியானவனே: நீக்கம் குறித்து ரஹானே புலம்பல்

ஒருநாள் போட்டிகளிலிருந்து தன்னை நீக்கியது குறித்து அஜிங்கிய ரஹானே தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். கடைசியாக பிப்ரவரி 2018-ல் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடினார் அஜிங்கிய ரஹானே.

 

விராட் கோலி அவ்வப்போது ஏதாவது கூறுவார், ஆனால் அதைச் செயல்படுத்துவதில்லை. தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் 4ம் நிலையில் அஜிங்கிய ரஹானேவைத்தான் தான் நம்பியிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அதை அவரே கடைபிடிக்கவில்லை, ரஹானே புறக்கணிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு ரஹானே அளித்த பேட்டியில், “ஒரு பேட்ஸ்மெனாக நான் ஆக்ரோஷமானவன். ஆனால் குணாம்ச ரீதியில் கொஞ்சம் கூச்சம் அதிகம். என் பேட்தான் இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டும் என்று நான் நினைப்பவன், ஆனால் சில வேளைகளில் உண்மையைப் பேச வேண்டியுள்ளது. நான் எப்போதும் அணிக்குத்தான் முன்னுரிமை அளித்து வந்திருக்கிறேன். அணித்தேர்வுக்குழு, நிர்வாகம் ஆகியோர் முடிவுகளை மதித்தே நடந்திருக்கிறேன். தொடர்ந்து அப்படித்தான் நடந்து கொள்வேன் அதில் மாற்றமில்லை.

 

முக்கியமானது என்னவெனில் ஒரு வீரராக அணிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் எனக்கு அதிக வாய்ப்புகள் சீராகத் தரப்பட வேண்டும், அதற்கு நான் உரியவனே.

 

உள்ளபடியே நான் ஒரு போதும் என் சாதனைகளை நினைத்ததில்லை, அதை நினைத்து விளையாடியதில்லை. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கினேன். ஆஸி.க்கு எதிராகவும் ஆடினேன், ஆனால் தென் ஆப்பிரிக்காவில் 4ம் நிலைக்கு நான் பொருத்தமுடையவன் என்று நிர்வாகம் கருதியது. நான் அவர்கள் முடிவே என் முடிவு என்று நினைத்தேன்.

 

நமக்கு அணியில் ஆதரவு இருக்கிறது எனும்போதுதான் ஒரு வீரர் அச்சமின்றி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

 

இந்நிலையில் நான் கைவிடப்பட்டதாக உணர்ந்தால் என் மனம் எதிர்மறையாக மாறிவிடும், ஆகவே அந்த வழியில் நான் நினைக்க மாட்டேன். தேர்வுக்குழுவினர்தான் சிறந்த நீதிபதிகள் அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று விட்டுவிடுவேன். நான் நன்றாக ஆடிவருவதாகவே நினைக்கிறேன், கடைசி 3-4 தொடர்களில் என் சராசரி 45-50, அணியிலிருந்து நீக்கியவுடன் நான் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி அதிலும் நன்றாகவே ஆடினேன்.

 

எம்.எஸ்.கே. பிரசாத் நான் உலகக்கோப்பை அணி பரிசீலனையில் இருக்கிறேன் என்று கூறுவது மகிழ்ச்சியே, ஆனால் சீராக எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டமாஅ? உலகக்கோப்பையில் ஆடுவது ஒவ்வொரு வீரரின் கனவாகும். எனக்கு ஒரு வாய்ப்பு தர நான் உரியவனே என்று கருதுகிறேன்.

 

நான் இன்னமும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன். எதிர்மறை எண்ணங்களை நான் என்னை விட்டு தள்ளியே வைத்திருக்கிறேன், ஆனால் நமக்கே தெரியாது எப்போது எது மாறும் என்று.  நல்ல மனிதர்கள் சுற்றி இருப்பது நல்லது, இல்லையெனில் உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்கும் ஆட்களுடன் இருந்தால் எதிர்மறைச் சிந்தனைதான் எழும். நான் அத்தகைய மனிதர்களிடத்திலிருந்து தள்ளியே இருக்கிறேன். எனக்கு நெருக்கமான 4-5 பேர்களுடன், என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களுடன் தான் பழகி வருகிறேன்” என்றார் ரஹானே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x