Published : 03 Feb 2019 03:14 PM
Last Updated : 03 Feb 2019 03:14 PM

தோனியின் அபார சமயோசிதம்: நன்றாக ஆடிய நீஷம் ஆட்டமிழந்த கதை- கொண்டாடித் தீர்த்த தோனி

வெலிங்டன் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்காகப் போராடி ஆடிக்கொண்டிருந்த ஜேம்ஸ் நீஷம் விக்கெட் விழக் காரணம் விக்கெட் கீப்பர் தோனியின் சமயோசிதமான ஒரு செயல்பாடே.

 

31 ஓவர்களில் 135/6 என்று நியூஸிலாந்து திணறிய நிலையில் சாண்ட்னர், நீஷம் இணைந்து ஸ்கோரை 176 ரன்களுக்கு 6 ஓவர்களில் கொண்டு சென்றனர்.

 

இதில் ஜேம்ஸ் நீஷம் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 44 ரன்கள் எடுத்து அதிரடி முறையில் ஆடி வந்தார். இந்நிலையில் இன்னிங்சின் 37வது ஓவரின் 2வது பந்தை கேதார் ஜாதவ் வீச நீஷம் நன்றாகக் காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட்டு பந்து பின்னால் தோனியிடம் சென்றது.

இதனையடுத்து ஜாதவ் எல்.பி.முறையீடு எழுப்பினர். ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது. பந்து பின்னால் தோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ் நீஷம் கிரீசுக்கு வெளியே இருந்தார். தோனி அமைதியாக 2 அடி வந்தார், எல்.பி. அப்பீல் செய்தார்.

 

ஆனாலும் நீஷம் வெளயில் இருந்த வாய்ப்பை மிகச்சாமர்த்தியமாகக் கையாண்ட தோனி பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ மூலம் ஸ்டம்பை நோக்கி எறிந்தார், பந்து ஸ்டம்பில் பட நீஷம் ரன் அவுட் ஆனார்.

 

எப்போதும் விக்கெட்டை பெரிய அளவில் கொண்டாடாத தோனி இந்த விக்கெட்டை பெரிதாகக் கொண்டாடினார். தோனி இம்மாதிரி ஒரு விக்கெட்டை கொண்டாடி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

 

இந்த ரன் அவுட் உண்மையில் ஒரு திருப்பு முனையே என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்திய வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஏனெனில் நீஷம் நின்றிருந்த போது வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 6க்கும் கீழ்தான் இருந்தது.

 

எனவே பேட்டிங்கில் சொதப்பிவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் தோனி தன் இருப்பை அணிக்கு பங்களிப்பாக மாற்றியதில் இந்த ஆட்டம் திருப்பிய ரன் அவுட்டும் அங்கம் வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x