Last Updated : 23 Feb, 2019 03:26 PM

 

Published : 23 Feb 2019 03:26 PM
Last Updated : 23 Feb 2019 03:26 PM

ஆஸி.யுடன் நாளை டி20 போட்டி: ரிஷப் பந்த், விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா ?

விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ள முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்பதால், அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க முயலும். இந்த போட்டியில் விஜய் சங்கர், ரிஷப் பந்த் ஆகியோர் வாய்ப்பு பெறுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டிணத்தில் நாளை மாலை நடக்கிறது.

 உலகக்கோப்பைப் போட்டிக்கான இறுதிக்கட்ட வீரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்பதால், இந்த தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிப்பார்கள் எனத் தெரிகிறது.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்  டி20 போட்டித் தொடருக்கு  மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆதலால், தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்துள்ள  இரு டி20 வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

அதேசமயம், உலகக் கோப்பையில் ரிஷப் பந்தை சேர்க்கும் வகையில் அவருக்கு கூடுதலாக இந்த தொடரில் வாய்ப்புகளை அளிக்க நிர்வாகம் முயற்சிக்கிறது.

காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக, விஜய் சங்கருக்கு டி20 போட்டியிலும், ஒருநாள் தொடரிலும் இடம் பெற அதிகமான வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்  கொண்டால் சிறப்பாகும். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விஜய் சங்கர் பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டதால், இந்த தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வேகப்பந்துவீச்சில் இந்திய அணி சிறிது சுணக்கம் கண்டிருந்தது. ஆனால், இந்த தொடரில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி இருப்பதால் பந்துவீச்சு துறை கூடுதல் பலம் சேர்க்கும்.

 அதேபோல புதுமுக சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே அறிமுகமாகிறார். ஏற்கெனவே ரிஸ்ட் ஸ்பின்னர்களா யஜுவேந்திர சாஹல், குர்னல் பாண்டியா ஆகிய இருவர் இருக்கும் நிலையில், அவர்களுடன் இணைந்து மார்கண்டே பந்துவீச்சை சோதித்து பார்க்க உள்ளனர்.

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இதுவரை 11 போட்டிகளில் மோதியுள்ள இந்திய அணி 11-6 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரு தொடரை இந்திய அணி சமன் செய்துள்ளது. 2017-ம் ஆண்டிலும், 2018-ம் ஆண்டிலும் சமன் செய்துள்ளது.

ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் இப்போது கோலி தலைமையில் உள்நாட்டில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு விராட் கோலிக்கு சிறப்பான ஆண்டாக இருந்தது. ஒட்டுமொத்தமாக 38 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 2,735 ரன்கள் சேர்த்துள்ளார்.

 இதில் ஒருநாள் போட்டியில் 14 இன்னிங்ஸ்களில் 1,202 ரன்களை விராட் கோலி சேர்த்துள்ளார். இதில் சராசரி 133.55 ரன்களாகும். இதில் 6 சதங்கள், மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.

 அதேபோல 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி தனது சராசரியை 61 ரன்களாக வைத்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். ஆதலால், நாளை போட்டியில் விராட் கோலியின் பேட்டிங், அனுபவ வீரர் தோனியின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்திய அணியுடன் டி20 போட்டியில் விளையாடியதற்கு பின் எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால், அணியில் இடம் பெற்ற  பல வீரர்கள் பிக் பாஷ் லீக் போட்டியில் பல்வேறு அணிகளில் விளையாடியுள்ளனர்.

 டிஆர்கி ஷார்ட், கானே ரிச்சர்ட்ஸன், ஷார்ட் உள்ளிட்ட  வீரர்கள் பிக் பாஷ் லீக்கில் தொடர்ந்து விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

 இந்தியாவின் தட்பவெப்பத்துக்குப் பழக வேண்டும் என்பதற்காக கடந்த திங்கள்கிழமையே விசாகப்பட்டினம் வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக அந்த அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதால், இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக முயற்சிப்பார்கள். போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

 இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, குர்னல் பாண்டியா, விஜய் சங்கர், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங்க் மார்கண்டே.

 ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டி ஆர்கே ஷார்ட், பாட் கம்மின்ஸ், அலெக்ஸ் காரே, ஜேஸன் பெஹரன்டார்ப், நாதன் கோல்டர் நீல், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சார்ட்ஸன், கானே ரிச்சார்ட்ஸன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஸ்டன் டர்னர், ஆடம் ஜம்ப்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x