Published : 16 Feb 2019 04:50 PM
Last Updated : 16 Feb 2019 04:50 PM

சேவாக்கின் பெருந்தன்மைக்கு குவியும் பாராட்டு: வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், அவந்திபோரா நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம், துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் இந்தக் கொடூர செயலுக்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், முகமது கைப், ஷிகர் தவண் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஒவ்வொரு மாநில அரசும் வீரமரணம் அடைந்த வீரர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு நிவாரணத் தொகையை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அனைவரையும் நெகிழச் செய்யும் விதமாக, வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதோடு, வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் சேவாக் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் சேவாக் கூறியிருப்பதாவது, " வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்தவரைக் குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன் " எனத் தெரிவித்துள்ளார்.

வீரேந்திர சேவாக் ஹரியானாவில் உள்ள ஹஜ்ஜாரில் சர்வதேச பள்ளிக்கூடம், பயிற்சிப்பள்ளி உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக்கின் பெருந்தன்மையான அறிவிப்பை நெட்டிசன்களும், அவரின் ரசிகர்களும் பாராட்டி தள்ளுகின்றனர்.

இதற்கிடையே, குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், தன்னுடைய ஒருமாத ஊதியத்தை வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தன்னைப் போல் நாடுமுழுவதும் உள்ள மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x