Last Updated : 14 Feb, 2019 01:56 PM

 

Published : 14 Feb 2019 01:56 PM
Last Updated : 14 Feb 2019 01:56 PM

எல்லாம் விதி, என்னுடைய ஒரே வருத்தம், ராணுவத்தில் சேரமுடியாததுதான்: கவுதம் கம்பீர் உருக்கம்

ராணுவப் பணியை நான் அதிகமாக நேசித்தேன், என்னால் கிரிக்கெட் வீரராக முடிந்ததேத் தவிர ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம் எனக் கவுதம் கம்பீர் உருக்கமாத் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பங்கேற்றார். அப்போது தனது இளமைக்கால கனவுகளை அனைவரிடமும் கம்பீர் பகிர்ந்து கொண்டார். அப்போது கம்பீர் பேசியதாவது:

எல்லாம் விதி, நான் 12-ம் வகுப்பு முடித்தபின், ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு விளையாடாவிட்டால், நிச்சயம் தேசிய பாதுகாப்பு அகாடெமி நடத்திய தேர்வில் பங்கேற்று உறுதியாக ராணுவத்தில் சேர்ந்திருப்பேன்.

ஏனென்றால், நான் முதலில் நேசித்து ராணுவப் பணியைத்தான். இப்போதும் ராணுவப் பணியின் மீது ஆர்வமாகவும், ஆசையாகவும் இருக்கிறேன். உண்மையில் என் வாழ்க்கையில் ஒரே வருத்தம் என்னவென்றால் என்னால் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்பதுதான்.

நான் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி விளையாடச் செல்லும் போது, சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்தேன். முடிந்தவரைச் சிறப்பாகவே விளையாடினேன். ஆனாலும், நான் முதலில் விரும்பிய ராணுவத்துக்காகவும், ராணுவ வீரர்களுக்காகவும் இன்றும் என்னால் முடிந்த பணிகளை, சேவைகளை, உதவிகளைச் செய்து வருகிறேன்.

ராணுவத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குழந்தைகளின் நிலையைப் பார்த்து, அதன்பின்தான் நான் அந்த குழந்தைகளுக்கான நல அமைப்பைத் தொடங்கினேன். என்னுடைய அமைப்பை விரிவுபடுத்தப்பட வேண்டிய நேரம் வரும். தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் 50 குழந்தைகளுக்கு நான் தற்போது உதவி வருகிறேன். இதை 100 குழந்தைகளுக்காக உயர்த்த விரும்புகிறேன்.

இளம் வயதில் யார் என்னுடைய கனவு நாயகர் என்ற இந்தக் கேள்வியை லட்சக்கணக்கானோர் கேட்டுள்ளார்கள். நான் சொல்வதெல்லாம், அவ்வாறு எனக்கு யாரும் இல்லை. நான் எப்போதும் நானாகவே வளர்ந்தேன். அதுதான் என்னுடைய மிகப்பெரிய வலிமை, அதைத்தான் நான் என்னுடைய குழந்தைகளுக்கும் கூறுகிறேன்.

இவ்வாறு கவுதம் கம்பீர் பேசினார்.

2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை ஆகியவற்றில் 37வயதான கம்பீர் முக்கியப் பங்காற்றினார். 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ரன்களும் சேர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x