Published : 03 Feb 2019 10:54 AM
Last Updated : 03 Feb 2019 10:54 AM

பெற்ற தாய் இறந்த செய்தி அறிந்தும் பேட்டிங், பந்துவீசி அசத்திய மே.இ.தீவுகள் வீரர்: வெற்றியை அர்ப்பணித்த கேப்டன்

பெற்ற தாய் இறந்த செய்தி அறிந்தும் அணியின் வெற்றிக்காக பேட்டிங், பந்துவீசிச் சென்று மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோஸப் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாநத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கியந்தியத்தீவுகள் வெற்றி பெற்றவுடன் அந்த வெற்றியை அல்ஸாரி ஜோஸப்புக்கு அர்ப்பணிப்பதாக கேப்டன் ஜேஸன் ஹோல்டர் அறிவித்து நெகிழச் செய்தார்.

இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான 2-வது டெஸ்டி நார்த்சவுண்ட் நகரில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 187 ரன்களுக்கும், மே.இ.தீவுகள் அணி 306 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெற்றி இலக்கான 14 ரன்கள் எளிதாக அடைந்த மே.இ.தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் போட்டியில் 3-வது நாளின்போது, மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது, அந்த அணி வீரர் அல்ஸாரி ஜோஸப்பின் தாய் உடல்நலக்குறைவாக இறந்துவிட்டார் என்ற தகவல் அளிக்கப்பட்டது. அடுத்த சில மணிநேரத்தில் களமிறங்கிய வேண்டிய நிலையில் ஜோஸப் இருந்தார்.

ஆனால், தாய்இறந்த செய்தி அறிந்தும், அங்குச் செல்லாத அல்ஸாரி ஜோஸப் அணிக்காக பேட்டிங் செய்து கொடுத்துவிட்டுச் சென்றார். ஜோஸப்பின் மனவலிமையையும், அணியின் வெற்றிக்காகத் துணைநின்றதையும் சகவீரர்களும், மேற்கிந்தியத்தீவுகள் வாரியமும் பாராட்டியது.

மேலும், அடுத்த4-ம் நாள் ஆட்டத்தில் அனைத்து மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களும் சகவீரரின் தாய் இறந்த துக்கத்தில் பங்கேற்கும் விதமாகக் கையில் கறுப்புப்பட்டை அணிந்து களமிறங்கி விளையாடினார்கள்.

தனது தாய் இறந்தபின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுவிட்ட 24மணிநேரத்தில் திரும்பிய அல்ஸாலி ஜோஸப் மீண்டும் அணியில் இணைந்து விளையாடினார். ஜோஸப் களத்துக்குள் வந்தபோது ரசிகர்கள் கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளரான ஜோஸப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரு இன்னிங்ஸிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் விக்கெட்டை ஜோஸப் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் " எங்களுடைய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாலி ஜோஸப்பின் தாய் ஷாரன் ஜோஸப் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். இந்தக் கடினமான நேரத்தில் அல்ஸாரி ஜோஸப்புடன் அனைவரும் இணைந்து நிற்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்குப்பின் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் கூறுகையில், " அல்ஸாரி ஜோஸப்பின் உணர்வுகளை விவரிப்பது, விளக்குவது கடினமானது. தாய் இறந்த சூழலிலும் அணியின் வெற்றிக்காகக் களமிறங்கினார். தனது தாய் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு, மீண்டும்அணியில் இணைந்து பந்துவீசி வெற்றிக்கு உதவினார். தாயை இழந்துவாடும் ஜோஸப்புக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவிக்கிறோம். இந்த வெற்றியை அல்ஸாரி ஜோஸப்புக்கு சமர்ப்பிக்கிறோம் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x