Last Updated : 10 Feb, 2019 01:21 PM

 

Published : 10 Feb 2019 01:21 PM
Last Updated : 10 Feb 2019 01:21 PM

சேவாக் பேட்டிங்கிற்கு பயந்தேன்; டெஸ்ட் கிரிக்கெட்டை இழப்போம்: முத்தையா முரளிதரன் பளிச் பேட்டி

சர்வதேச அரங்கில் நான் பந்துவீச பயந்த ஒரே பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் மட்டும்தான். களத்தில் நிற்கவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தேன் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

133 டெஸ்ட் போட்டிகள் 800 விக்கெட்டுகள், 350 ஒருநாள் போட்டிகள் 534 விக்கெட்டுகள். டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை 22 முறையும், 5 விக்கெட்டுகளை 67 முறையும் வீழ்த்திய ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.

முரளிதரனின் டெஸ்ட் சாதனையை முறியடிக்க அல்ல, நெருக்கமாக வரக்கூட எந்த வீரரும் இல்லை. கிரிக்கெட்டில் இருந்து விலகினாலும், இன்னும் கிரிக்கெட் என்று பேச்சை எடுத்தாலே முகத்தில் அவருக்கே இருக்கும் புன்னகையுடனும், நம்பிக்கையுடனும் 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசினார்.

இலங்கை அணி மிகவும் கடினமான காலத்தில் இருந்தபோது, சர்வதேச அரங்கில் பல ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் இருந்தபோது, தனக்கான பாணியில் பந்துவீசி சர்வதேச வீரர்களைத் திணறடித்தவர் முத்தையா முரளிதரன்.

அவர் சென்னையில் தி இந்துவுக்கு(ஆங்கிலம்) அளித்த பேட்டி:

''சரியான நேரத்தில் நான் இலங்கை அணிக்குள் சென்று விளையாடினேன். 20 கிரிக்கெட் வீரர்களுடன் நான் ஏறக்குறையச் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். திறமையான கிரிக்கெட் வீரர்களுக்குக்கூட இந்த வாய்ப்பு அமைந்திருக்காது.

என்னைப் பொறுத்தவரை இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் போட்டியை வர்த்தக ரீதியாகவே அணுகுகிறார்கள். வேறு என்ன செய்வது, சமூகம் மாறிக்கொண்டுவருவதால், கிரிக்கெட்டும், கிரிக்கெட் வீரர்களும் மாறி வருகிறார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகச்சிறந்த போட்டித் தளம். வீரர்களை அடையாளம் காண வாய்ப்பாக இருக்கிறது. ஆனால், இந்த ஐபிஎல் போட்டி ரசிகர்கள், வீரர்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போதுள்ள பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளத்தில் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு நிலைத்து ஆடும் திறமை, தடுத்தாடும்  பொறுமை இல்லை. இப்படியே சென்றால், சிறிது சிறிதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வரும் காலத்தில் நாம் இழப்போம்.

நான் பந்துவீசிய காலத்தில் நான் பார்த்து அச்சப்பட்ட ஒரே பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் மட்டும்தான். அதிரடியான பேட்ஸ்மேன், எந்த பந்துவீச்சாளரின் பந்துவீச்சையும் துவம்சம் செய்யக்கூடியவர். முடிந்தவரை அவரைக் களத்தில் செட்டில் ஆகவிடாமல் பார்த்துக்கொள்வது பந்துவீச்சாளர்களுக்கு நல்லது. அதுபோலவே நானும் சேவாக்கிடம் எச்சரிக்கையுடனே பந்து வீசுவேன். நானும் அவரைப் பார்த்து பயந்தேன், அவரும் என் பந்துவீச்சைப் பார்த்து அச்சப்பட்டார்.

சேவாக்கிடம் இருந்து ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். எப்போதுமே அடுத்த பந்து உங்களுக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது. அது உங்களுக்கான பந்தாக இருக்கலாம், அல்லது நாளாக அமையலாம் அல்லது அவ்வாறு அமையாமலும் போகலாம். ஆனால், பந்துக்கு ஏற்றார்போல், நாளுக்கு ஏற்றார்போல் உங்கள் மனதை மாற்றக்கூடாது என்று சேவாக் அடிக்கடி கூறுவார்.

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு குல்தீப் யாதவ் சிறந்த பந்துவீச்சாளர் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை பேட்ஸ்மேனை நிலைகுலைய வைக்கும் பந்துவீச்சாளர் குல்தீப். வித்தியாசமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளுகிறார். இடதுகையில் சினாமென் பந்துவீச்சில் ஈடுபடுவது மிகவும் அரிதானது. நம் தேவைக்கு ஏற்றார்போல் பந்துவீச்சை மாற்றி பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கலாம்.

இந்திய அணிக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து பும்ரா. ரசித் மலிங்காவை பும்ரா நினைவுபடுத்துகிறார். பும்ரா பந்துவீசும் போது, கை அகலமாகச் சுற்றிவந்து வீசும்போது பேட்ஸ்மேனின் கவனத்தைச் சிதறடித்து, கையை மட்டும் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, பந்தின் ஸ்விங்கை கவனிக்க மறந்து விக்கெட்டை இழப்பார்கள். பும்ராவின் பந்துவீச்சில் விளையாடுவது கடினம்தான்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார். 29 வயது முதல் 34 வயதுவரை நம்முடைய உடற்தகுதியை தக்கவைத்து, புகழின் உச்சத்துக்குச் செல்ல வேண்டும். அந்த வயதுக்குப் பின் உங்கள் உடல் உங்கள் சொல்படி கேட்பதில் இருந்து விலகும்.

இலங்கை வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் சிறந்த வீரர். ஆனால், உடற்தகுதி பிரச்சினையால் பல போட்டிகளை இழந்துவிட்டார். உடற்தகுதியின்மை என்பது மரபணு சார்ந்த பிரச்சினை''.

இவ்வாறு முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x