Published : 08 Feb 2019 04:10 PM
Last Updated : 08 Feb 2019 04:10 PM

குருணால் பாண்டியா, ரோஹித் சர்மா அபாரம்: நியூஸி.க்கு பதிலடி கொடுத்தது இந்தியா

வெலிங்டனில் முதலில் பேட் செய்து இந்திய அணியை அடித்து நொறுக்கி வெற்றி பெற்றதையடுத்து ஆக்லாந்திலும் வெல்லும் நம்பிக்கையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 158/8 என்று முடிந்தது, இந்த மைதானத்தில் இந்த ஸ்கோர் போதாது, இதனையடுத்து இலக்கை விரட்டிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 162/3 என்று அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

 

இந்திய அணியில் ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு வந்து ரோ‘ஹிட்’ சர்மாவாகி 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 பெரிய சிக்சர்களை அடித்து 50 ரன்கள் எடுக்க ஷிகர் தவண் 31 பந்துகளில் 30 ரன்களுக்குத் தடவினார். விஜய் சங்கர் 14 ரன்களில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் வெளியேற ரிஷப் பந்த் (28 பந்தில் 40), தோனி (17 பந்தில் 20), வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

 

முதல் ஓவரில் சவுதியை கட் ஷாட் பவுண்டரியுடன் தொடங்கிய ரோஹித் சர்மா, அதிவேக பவுலர் லாக்கி பெர்கூசன் 142 கிமீ வேகத்தில் வீசிய முதல் பந்தை அதியற்புதமாக டீப் மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ் அடித்து அதிர்ச்சியளித்தார்.

 

ஆனால் அடுத்த குக்கெலின் பந்தில் அடி வாங்கிய ரோஹித் சர்மா அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிட் ஆனில் தூக்கி அடித்து ஒரு பவுண்டரியையும் அடுத்த பந்தே ஃபைன் லெக்கில் ஒரு அருமையான பிக் அப் ஷாட்டில் சிக்சரையும் விளாசினார்.

 

மாறாக ஷிகர் தவண் டைமிங்குக்குத் திணறினார், முதல் பவுண்டரி இன்சைடு எட்ஜில் வந்தது. சவுதியை 2 பவுண்டரிகள் அடித்தார். இன்னொரு புல்ஷாட் சரியான ஷாட்.  6 ஓவர் பவர் ப்ளேயில் இந்திய அணி 50 ரன்கள் வந்தது. சாண்ட்னர் தன் முதல் ஓவரை டைட்டாக வீசினாலும் இஷ் சோதி தன் முதல் ஓவரில் 11 ரன்களை வாரி வழங்கினார், இதில் ஒரு மோசமான லெக் திசை பந்தை ரோஹித் சர்மா குறைந்த தூர ஃபைன் லெக் பவுண்டரிக்கு சிக்சராகத் தூக்கினார், இந்த ஷாட் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார் ரோஹித் சர்மா.

 

சாண்ட்னர் 2வது ஓவரில் ரோஹித்திடம் சிக்க மேலேறி வந்து மிக அழகாக நேராக சிக்ஸ் அடித்தார் இந்த ஓவரில் சாண்ட்னரும் 11 ரன்களைக் கொடுத்தார்.  பிறகு ஸ்கொயர்லெக்கில் தட்டி விட்டு 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, சோதியின் பந்தை டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஷாட் சரியாகச் சிக்காமல் சவுதி கேட்சுக்கு வெளியேறினார். 31 பந்துகளில் 30 ரன்களுக்கு சரளமில்லாமல் ஆடிய தவண் பெர்கூசனின் ஆக்ரோஷமான பவுன்சரை  புல் ஷாட் ஆடும் முயற்சி செய்தார், ஆனால் பந்தின் கோணம், வேகம் ஷிகர் தவனுக்கு டூ மச் ஆக ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. ஒரு விதத்தில் அசிங்கமாக ஆட்டமிழந்தார் ஷிகர் தவண். ஆனால் ஸ்கோர் 88/2 என்று இருந்த போது சங்கர், பந்த் இணைந்தனர்.

 

 

மிட்செல் ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்சரை அடித்து வேகம் குறைந்த பந்தில் டீப்பில் கேச் ஆகி வெளியேறினார்.  பந்த் 4 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 22 ரன்களை அதற்குள் எடுத்திருந்தார். தோனி இறங்கி சவுதியை புல்ஷாட் பவுண்டரி அடித்துக் கணக்கைத் தொடங்கினார். ரிஷப் பந்த் அப்போதுதான் சவுதியை ஒரு அரக்க ஷாட்டில் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார். 19வது ஓவரில் பந்த் குக்கெலினை நேராக பவுண்டரி அடித்தது வெற்றி ஷாட்டாக அமைந்தது. 162/3. இந்தியா வெற்றி

 

குருணால் பாண்டியா அபாரம், நியூஸியை மட்டுப்படுத்தியது இந்திய பவுலிங்: மிட்செலுக்கு நாட் அவுட்டை அவுட் கொடுத்த 3வது நடுவர்...

 

முன்னதாக தன்னம்பிக்கையுடன்  முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி புவனேஷ்வர் குமார், கலீல் அகமெட் ஸ்விங்கில் திணறியது கடந்த போட்டியில் வெளுத்து கட்டி 84 ரன்கள் விளாசிய செய்ஃபர் நிறைய பீட்டன் ஆனார், கடைசியில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 12 ரன்களில் அவர் புவனேஷ்வரை புல் ஆட நினைத்து பந்து இன்சைடு எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் ஆனது.

 

பந்து ஸ்விங் ஆனதால் கொலின் மன்ரோவுக்கும் மாட்டவில்லை அவரும் 12 பந்துகளில் 12 எடுத்து குருணால் பாண்டியா பந்தை சற்றே ஒதுங்கிக் கொண்டு கவரின் மேல் அடிக்க நினைத்தார் ஆனால் நேராக கவரில் கேட்ச் ஆனது. இதே ஓவரில் மிட்செல் அவுட் பெரிய ட்ராமா ஆனது, குருணால் பாண்டியா பந்தில் அவர் எல்.பி தீர்ப்பளிக்கப்பட்டார். வில்லியம்சன் ஆலோனையில் மேல்முறையீட்டுக்குச் சென்றது.  பந்து பேட்டைக் கடக்கும் போது ஹாட்ஸ்பாட்டில் ஒரு பெரிய புள்ளி தெரிந்தது அதாவது மட்டையின் உள்விளிம்பில் பட்டதற்கான அடையாளம் அது.  மட்டை பேடில் பட்டதல்ல அது. ஆனால் 3ம் நடுவர் கள நடுவர் அவுட்டை உறுதி  செய்தார். வில்லியம்சன் கடுப்பாகி நடுவரிடம் பேசினார்.

உடனே பெவிலியன் போய்க்கொண்டிருந்த மிட்செல் நிறுத்தப்பட்டார். அப்போது தோனி வில்லியம்சனிடமும், நடுவரிடமும் பேசினார். என்ன பேசினார் என்று தெரியவில்லை. ரோஹித் சர்மா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் மிட்செல் போக வேண்டியதாயிற்று. இது சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குருணால் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்.

 

கேன் வில்லியம்சன் 3 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 20 என்று அபாரமாகத் தொடங்கி, குருணால் பந்தை புல் ஷாட் ஆட முயன்று ஸ்கிட் ஆன பந்தில் எல்.பி.ஆனார். நியூஸிலாந்து 50/4.

 

அதன் பிறகு டெய்லர், கொலின் டி கிராண்ட் ஹோம் கூட்டணி  8 ஓவர்களில் 77 ரன்களைச் சேர்த்தது. 28 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அவர் 50 ரன்களை எடுக்க, ராஸ் டெய்லர் 36 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். கொலின் சாஹலை வெளுத்துக் கட்டி 11வது ஓவரில் 6,4,6 என்று அடித்தார். இதனால் சாஹலின் அனாலிசிஸ் 4 ஓவர் 37 ரன்கள் என்று ஆனது. குருணால் பாண்டியாவையும் 12 வது ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார் கொலின்.

 

இந்தக் கூட்டணி உடையும் போது, அதாவது கொலின் ஹர்திக் பாண்டியா பந்தை நேராக கேட்ச் கொடுத்து வெளியேறிய போது, 15.4 ஓவர்களில் 127/5 என்று இருந்தது இந்நிலையில் ஸ்கோரை 175 வரை கொண்டு சென்றிருக்கலாம் ஆனால் டெய்லரை விஜய் சங்கர் ரன் அவுட் செய்ததையடுத்து  அந்த வாய்ப்பு கைநழுவ 153/5லிருந்து 158/8 என்று ஆனது.  கலீல் அகமெட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற குருணால் பாண்டியா 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக குருனால் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x