Published : 19 Jan 2019 09:55 AM
Last Updated : 19 Jan 2019 09:55 AM

மிசோரமை வீழ்த்தியது சென்னை சிட்டி எப்சி

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் நேற்று கோவை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்சி - மிசோரம் ஐஸ்வால் அணிகள் மோதின. ஆட்டத்தின்  28-வது நிமிடத்தில் ராஜூ உதவியுடன் சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் கோல் அடிக்க சென்னை சிட்டி எப்சி 1-0 என முன்னிலை வகித்தது. அடுத்த 9-வது நிமிடத்தில் மிசோரம் ஐஸ்வால் பதிலடி கொடுத்தது.

அந்த அணி வீரர் ஆல்பர்ட் ஸோமிங்மாவா அடித்த கோலால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்சி கூடுதல் உத்வேகத்துடன் விளையாடியது.

60-வது நிமிடத்தில் ஜேசுராஜ் உதவியுடன் பெட்ரோ மான்ஸியும், 69-வது நிமிடத்தில் சான்ட்ரோ ரோட்ரிக்ஸூம் கோல் அடிக்க சென்னை சிட்டி எப்சி 3-1 என முன்னிலை பெற்றது. அடுத்த 11-வது நிமிடத்தில் பெட்ரோ மான்ஸி மீண்டும் கோல் அடிக்க சென்னை சிட்டி அணியின் முன்னிலை 4-1 என அதிகரித்தது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் முடிவில் சென்னை சிட்டி எப்சி 4-1 என முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து காயங்களுக்கு இழப்பீடாக 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதில் முதல் இரு நிமிடங்களில் மிசோரம் ஐஸ்வால் அணி வீரர்களான இசாக், லால்மவுபுயிமவியா ஆகியோர் தலா ஒருகோல் அடித்தனர். இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. எனினும் அடுத்த 3 நிமிடங்களில் மேற்கொண்டு கோல் ஏதும் வாங்காமல் பார்த்துக் கொண்டது சென்னை சிட்டிஅணி. முடிவில் சென்னை சிட்டி எப்சி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை சிட்டி எப்சி அணிக்கு இது 9-வது வெற்றியாக அமைந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ளசென்னை சிட்டி எப்சி 3 ஆட்டங்களை டிராவில் முடித்திருந்தது. அதேவேளையில் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் சென்னை சிட்டி எப்சி 30 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்துமுதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதேவேளையில் 7-வது தோல்வியை பதிவு செய்த மிசோரம் ஐஸ்வால் அணி பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x