Published : 03 Jan 2019 04:35 PM
Last Updated : 03 Jan 2019 04:35 PM

கப்தில் சதம், நீஷம் ருத்ரதாண்டவம்: இலங்கையை உருட்டி எடுத்த நியூசி.

மவுண்ட்மவுங்கினியில் இன்று பகலிரவாக நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 138 ரன்களும், நீஷம் 13 பந்துகளில் 47 ரன்களும் விளாசி இமாலய ஸ்கோர் எடுக்க உதவி வெற்றிக்கு அடித்தளமிட்டனர். ஆட்டநாயகன் விருதை கப்தில் பெற்றார்.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. 372 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 49 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.

டாஸ்வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினார். முன்ரோ 13 ரன்களில் மலிங்கா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு கப்திலுடன் கேப்டன் வில்லியம்சன் சேர்ந்தார். இருவரும் சிறப்பாக பேட் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். வில்லியம்ஸன், கப்தில் அரைசதம் அடித்தனர்.

2-வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன், கப்தில் ஜோடி பிரிந்தது. வில்லியம்ஸன் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெய்லர், கப்திலுக்கு துணையாக பேட் செய்தார்.

சிறப்பாக பேட் செய்த கப்தில் 111 பந்துகளில் தனது 14-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். துணையாக பேட் செய்த டெய்லர் 54 ரன்களில் பெரேரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.

கப்தில் 139 பந்துகளில் 138 ரன்கள் சேர்த்து பெரேரா பந்துவீச்சில் வெளியேறினார். இதில் 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும். அதுமட்டுமல்லாமல் கப்தில் விரைவாக 6 ஆயிரம்ரன்கள் சேர்த்த 9-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். அடுத்து வந்த நிகோலஸ் (15), சீபர்(11) , ஹென்ரி(6) என விரைவாக வெளியேறினார்கள்.

7-வது விக்கெட்டுக்கு நீஷம் 13 பந்துகளைச் சந்தித்து 47 ரன்கள் விளாசினார். குறிப்பாகக் திசர பெரேரா ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்கள் விளாசி 34 ரன்கள் சேர்த்தார்.

50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. நீஷம் 47 ரன்களிலும், சோதி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இலங்கை தரப்பில் மல்லிங்கா, பிரதீப், பெரேரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

372 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் பெரேரா 102, டிக்வேலா 76 ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரேரா 86 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு சிக்ஸர், 13பவுண்டரிகள் அடங்கும்.

நியூசிலாந்து தரப்பில் நீஷம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சோதி, பெர்குசன், போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x