Published : 05 Jan 2019 11:45 AM
Last Updated : 05 Jan 2019 11:45 AM

2 நாட்கள் மைதானம் நெடுக பந்தை ஓட ஓட விரட்டியதற்குக் காரணம் டிம் பெய்ன் கேப்டன்சியே: நேதன் லயன், பவுலிங் கோச் சாக்கர் கடும் அதிருப்தி

சிட்னி டெஸ்ட் போட்டியில் புஜாராவின் அபாரமான 193 ரன்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் (159), ஜடேஜா ஜோடி 204 ரன்களைச் சேர்க்க சுடுவெயிலில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் மைதானம் நெடுக சிகப்பு நிற தோல்பந்தை விரட்டியபடி அதிருத்ப்யில் ஆஸ்திரேலிய வீரர்களின் உடல்மொழி தொங்கிப் போனதைப் பார்க்க முடிந்தது.

 

622 ரன்களில் கோலி போனால் போகிறது என்று டிக்ளேர் செய்தார், இல்லையெனில் பந்த் இரட்டைச்சதம் என்று போய்க்கொண்டே இருந்திருப்பார், ஏனெனில் ஏற்கெனவே இந்தியா தொடரை வென்று விட்டது, இன்னும் கொஞ்சம் இந்த ஆஸ்திரேலிய அணியை அலைக்கழித்தால் என்ன தவறு என்று கோலி நினைப்பதில் தவறில்லை.

 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் டிம் பெய்னின் சிலபல உத்திகள் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளருக்கும் திருப்தி அளிக்கவில்லை, நேதன் லயனுக்கும் திருப்தி அளிக்கவில்லை.

 

ஆட்டத்தின் முதல் செஷனில் ஷார்ட் பிட்ச் பந்து உத்தியைக் கடைபிடித்தது தனக்கு திருப்தியளிக்கவில்லை, மிகவும் தவறான உத்தி என்று ஏபிசி ரேடியோவில் நேதன் லயன் விமர்சித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய பவுலிங் பயிற்சியாளர் டேவிட் சாக்கர், தொடரைச் சமன் செய்யும் வாய்ப்பு டிம் பெயினின் மோசமான கேப்டன்சி உத்தியினால் முதல் நாளே கைநழுவிப் போனது என்று விமர்சித்துள்ளார்.

 

இவரும் ஏபிசி ஊடகத்துக்குக் கூறும்போது, ‘பவுலர்கள் ஒன்றை விரும்பினர், டிம் பெய்ன் வேறு ஒன்றை விரும்புகிறார், பொதுவாக இப்படி இருக்காது, ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது அணியில் பல குழப்பங்கள் நீடிப்பதைப் பார்க்க முடிந்தது.

 

நேற்று நாங்கள் அனைவரும் 2ம் நாள் ஆட்டம் பற்றி விவாதித்தோம். மிகவும் ஏமாற்றமான நாள். நாங்கள் சில விஷயங்களை டிம் பெய்னுக்குத் தெரிவித்தோம். ஆக்ரோஷமான விவாதமே நடந்தது, நான் மிகவும் கோபமடைந்துதான் பேசினேன், நான் பொதுவாக அப்படிப்பட்டவன் அல்ல. நான் மட்டுமல்ல ஜஸ்டின் லாங்கரும் அதிருப்தி அடைந்தார். பவுலர்களுக்கும் இது தெரியும்’ என்றார்.

 

முதல் நாள் ஆட்டத்தில் ஷார்ட் பிட்ச் உத்தியைக் கடைபிடித்ததால் பந்தின் தையல் விரைவிலேயே அதன் கடினத்தன்மையை இழந்தது, பந்து மென்மையானதால் நேதன் லயனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. இதைத்தான் அவர் கூறினார், மேலும் பேட்ஸ்மென்கள் செட்டில் ஆனதற்கும் இது காரணம் என்று விமர்சனம் எழுந்தது.

 

முதல் நாள் முதல் செஷன், நேற்று காலை, மதியம் செஷன்களில் டிம் பெய்ன் உத்திகள் கடும் விமர்சனங்களுக்குள்ளாகின.

 

ஆனால் டிம் பெய்ன் இதற்குப் பதில் அளித்த போது, “ஒவ்வொரு நாள் ஆட்டம் முடிந்துமே விவாதிப்போம், பேசுவோம், நாங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருந்தோம்.  நேற்று காலை முதல் ஒரு மணி நேரம், உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு மணி நேரம் நாங்கள் கொஞ்சம் தவறிழைத்தோம். சில வேளைகளில் திட்டங்களை சரியாகச் செயல் படுத்த முடியாமல் போகும், அதுதான் நடந்தது.

 

ரிஷப் பந்த் மட்டையில் பந்து பட்டு வந்தது என்றே நான் நினைத்தேன். அது அவுட் ஆகியிருந்தால் 6/330. அப்போது ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.  இப்படிப்பட்ட சிறுசிறு விஷயங்கள் சேர்ந்து சேர்ந்து பெரிதாகி விடும் இது கிரிக்கெட்டில் சகஜம்.  இப்போதுதான் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், இப்போது ஒருவரையொருவர் குற்றம் சொல்வது கூடாது. நாங்கள் நிச்சயம் போராடுவோம்” என்றார்.

 

எது எப்படியிருந்தாலும் ஆஸ்திரேலிய அணியில் வீரர்களுக்கிடையே குழப்பமும், மோதலும் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் இந்திய அணியின் ஓய்வு ஒழிச்சலில்லாத ஆதிக்கமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x