Published : 24 Jan 2019 07:43 PM
Last Updated : 24 Jan 2019 07:43 PM

பெடரருக்கு ‘தண்ணி’ காட்டிய வீரரின் ஆட்டத்தை சிதைத்த நடால் அபார வெற்றி: ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் சிட்சிபாஸை வெளியேற்றினார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் பெடரரை வெளியேற்றிய கிரேக்க வீரர் சிட்சிபாசுக்கு ரஃபேல் நடால் கடும் பாடம் கற்பித்து 6-2, 6-4, 6-0 என்று நேர் செட்களில் நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் அதிரடியாக நுழைந்தார்.

 

கடைசி செட்டில் 5-0 என்று முன்னிலை வகித்திருந்த ரஃபேல் நடால் மிகப்பெரிய சர்வ் மூலம் வெற்றி பெற்று 6-0 என்று அவரை சுத்தமாக ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் நடால். இதனையடுத்து சிட்சிபாஸ் அவசரம் அவசரமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் அல்லது பிரான்ஸ் வீரர் லூகாஸ் பூயியைச் சந்திக்கிறார் நடால்.

 

சிட்சிபிபாஸ் மோசமாக ஆடினார் என்று கூற முடியவில்லை, ஒட்டுமொத்த ஆட்டத்திலும் ஒரேயொரு பிரேக்பாயிண்ட் வாய்ப்புதான் சிட்சிபியாஸுக்குக் கிடைத்தது என்றால் அது நடாலின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தைப் பறைசாற்றுகிறது அல்லது முன்னாள் அமெரிக்க வீரர் ஜான் மெக்கன்ரோ வர்ணனையில் கூறியது போல், ‘அடி என்றால் இதுதான் அடி’.

 

முதல் செட்டில் முதலில் பிரேக் செய்த நடால் 3-2 என்று முன்னிலை வகித்ததோடு  செட்டை 6-2 என்று கைப்பற்றினார்.  சிட்சிபாஸ் பக்கம் தவறு உள்ளது, இருமுறை தன் சர்வில் டபுள் பால்ட் செய்ய இருமுறையும் நடால் பிரேக் செய்தார். நடால் தன் ஃபோர்ஹேண்ட் ஷாட் மூலம் செய்யும் ஸ்பின் வகை ஷாட் சிட்சிபாசுக்கு ஒன்றும் புரியாமல் செய்தது. இதனால் பந்து வந்த உயரமும் சிட்சிபாஸ் ஷாட் அடிக்க வாகாக அமையவில்லை, திணறினார்.  மேலும் நடால் அடித்த ஷாட்டின் வேகம் மற்றும் பந்து எழும்பிய உயரம் சிட்சிபாஸை பேஸ்லனிலிருந்து சற்று பின்னாலிலிருந்தே பந்தைச் சந்திக்கச் செய்தது.  இதனால் ஷாட்களை சரியாகத் திருப்ப முடியவில்லை.  2வது செட்டை நடால் 6-4 என்று கைப்பற்றினார்.

 

3வது செட்டில் நடாலின் ஷாட்களை எதிர்கொள்வது என்பது சிட்சிபாஸுக்கு மேலும் சவாலாக அமைய அவரும் பிழைகளைச் செய்ய 3 முறை சிட்சிபியாஸ் சர்வை ரஃபா பிரேக் செய்தார், 6-0 என்று இறுதி செட்டில் சிட்சிபியாஸை மூழ்கடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x