Last Updated : 07 Jan, 2019 02:14 PM

 

Published : 07 Jan 2019 02:14 PM
Last Updated : 07 Jan 2019 02:14 PM

ஆஸி. டெஸ்ட் தொடர் எங்களுக்கு 12 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது: ரவி சாஸ்திரி புதிய விளக்கம்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று பெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்களின் தயாரிப்பு, ஆயத்தம் அனைத்தும் 12 மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கத் தொடரிலேயே தொடங்கிவிட்டது என்று இந்திய அணியின் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திர வெற்றி படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி கூட்டாக ஊடகங்களுக்கு மனம்திறந்து பேட்டி அளித்தனர்.

அப்போது ரவி சாஸ்திரி கூறியதாவது:

''எந்த வெற்றி எனக்கு எவ்வாறு மனநிறைவு தருகிறது என்று கூறுகிறேன். கடந்த 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை, 1985-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் எனக்குப் பெரிதாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த வெற்றிதான் மிகப்பெரியதாக அமைந்திருக்கும். ஏனென்றால், கிரிக்கெட்டின் உண்மையான வடிவமான டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி இது. டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே கடினமானதுதான்.

 

கடந்த காலம் என்பது வரலாறு. எதிர்காலம் என்பது புதிர். 71 ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறோம், இப்போதுள்ள நிகழ்காலத்தில் வாழலாம். இந்திய அணிக்கு தலைமை ஏற்றிருக்கும் கோலிக்கு நான் தலைவணங்குகிறேன்.

எனக்குத் தெரிந்தவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக விளையாடியது கோலியைத் தவிர வேறு யாரும் இருந்திருக்க முடியாது என நினைக்கிறேன். எந்த சர்வதேச அணியின் கேப்டனும் இதுபோன்று களத்தில் உற்சாகமாகப் போட்டியை நகர்த்தி இருந்ததை நான் பார்த்ததில்லை.

ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றி அணியின் ஒட்டுமொத்த கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. ஆஸ்திரேலியத் தொடர் எங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கவில்லை. எங்களுக்கு 12 மாதங்களுக்கு முன்பே தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிவிட்டது. நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தே ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கிவிட்டோம். பல்வேறு ஆய்வுகளைச் செய்தோம். எந்தக் கூட்டணியை தொடக்க வீரர்களாகக் களமிறக்குவது, நடுவரிசையில் யாரைக் களமிறக்குவது, டெஸ்ட் போட்டிகளுக்கு யார் சரியான பேட்ஸ்மேன்களா இருப்பார்கள் என்று நாங்கள் சோதனை மேற்கொண்டோம்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் அதிகமான விஷயங்களைக் கற்றோம். இங்கிலாந்தில் செய்த தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டோம். ஆனால், ஆஸ்திரேலியத் தொடரில் அந்தத் தவறுகளை செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். தவறு செய்யவும் இல்லை. கடந்த 12 மாதங்களாக நாங்கள் கடினமாக உழைத்ததற்குப் பலன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்கிலாந்து தொடரில் கடைசி வரிசை வீரர்கள் களத்தில் நின்று அதிகமான ரன்கள் சேர்த்தார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் அந்த வாய்ப்பை நாங்கள் வழங்கவில்லை.

ஆஸ்திரேலிய அணி வலிமையான அணியாக இல்லை என்று யாரேனும் கூறினால் அவ்வாறு சொல்பவர்கள் தயவு செய்து பேட் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலிய அணிக்காகக் களத்தில் இறங்கி விளையாடி இருக்கலாம்.

இந்தத் தொடரில் பும்ரா, ஹனுமா விஹாரி, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டார்கள் தங்களுக்கு உரிய இடத்தைத் தக்கவைக்க முயல்கிறார்கள். பிரித்வி ஷா காயத்தால் வெளியேறியது துரதிர்ஷ்டம்தான்''.

இவ்வாறு ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x