Published : 03 Jan 2019 08:15 AM
Last Updated : 03 Jan 2019 08:15 AM

சிட்னி டெஸ்ட்: டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங்; ராகுல் சொதப்பல்; இந்தியா 69/1

சிட்னி டெஸ்ட் போட்டியில் மீண்டும் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார், ஆனால் அவர் செய்த தவறு கே.எல்.ராகுலை இறக்கியது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி ராகுல் விக்கெட்டை இழந்து 69 ரன்கள் எடுத்துள்ளது.

 

ராகுல் 2 எட்ஜ் பவுண்டரிகளை அடித்து கடைசியில் அதே எட்ஜில் முதல் ஸ்லிப்பில் கேட்சிங் பிராக்டிஸ் கொடுத்து வெளியேறினார், பலரும் டிவி போடுவதற்கு முன்பே ராகுல் அவுட் ஆகி வெளியேறினார், இப்படியே போனால் பந்து போடுவதற்கு முன்னரே ஏன் களமிறங்குவதற்கு முன்னரே ராகுல் ஆட்டமிழக்கத் தொடங்குவார். ஜோஷ் ஹேசில்வுட் அவரை எளிதில் எட்ஜ் ஆக்கினார்.

 

அவரை உள்நாட்டு கிரிக்கெட்டில் இனி மட்டையும் கையுமாகத்தான் பார்க்க வேண்டும் என்று எச்சரித்து ஊருக்கு அனுப்பி வைப்பது நல்லது.

 

தொடக்கத்தில் ராகுல் விக்கெட்டைப் பார்த்து ஏமாந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் முழு லெந்தில் கொஞ்சம் அதிகமாக வீச முன் காலை நன்றாகப் பயன்படுத்தும் புஜாரா, மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினர்.

 

ஆனால் அதன் பிறகு ஷார்ட் பிட்ச், பவுன்சர் தொல்லை கொடுக்க ஆரம்பித்த பிறகு cat on a hot tin roof போல் புஜாராவும் அகர்வாலும் குதித்துக் குதித்து ஆடினர். பெர்த் போன்ற பிட்சாக இருந்திருந்தால் இருவரும் பெவிலியன் திரும்பியிருப்பார்கள், இந்திய அணிக்கு இந்தத் தொடரின் அதிர்ஷ்டம் பிரிஸ்பனில் டெஸ்ட் இல்லை, அடிலெய்ட், மெல்போர்ன், தற்போது சிட்னி ஆகியவை இந்திய ரக பிட்ச்களே, எப்படியெனில் டாஸ்வென்று முதலில் பேட் செய்து 350-400 என்று அடித்து விட்டால் பிறகு எதிரணியினருக்கு அழுத்தம் கொடுக்கும் ரக பிட்ச்களாக அமைந்ததும், வேகப்பந்து வீச்சும் கோலியின் அதிர்ஷ்டங்கள்.

 

இந்திய பேட்ஸ்மென்களின் முன் காலைக் கட்டிப் போட்டு பின் காலில் தள்ளினால் திணறுவார்கள் என்பது தெரிந்தது, மயங்க் அகர்வால் குறுக்கு மட்டை ஷாட்களை ஆடத் தயங்குகிறார். ஷார்ட் பிட்ச், பவுன்சர் பந்தில் அவருக்கு ஒரு எட்ஜ் எடுத்து பவுண்டரி சென்றது, இன்னொரு ஸ்டார்க் பந்து மெல்போர்ன் முதல் இன்னிங்சில் அவுட் ஆன பந்து போல் எழும்பி விரலைப் பதம் பார்த்து லெக் திசையில் விக்கெட் கீப்பர் பின்னால் சென்றது.

 

ஆனால் முன்னதாக ஃபுல் லெந்த் பந்துகளில் மிக அருமையான ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், அற்புதமான கவர் ட்ரைவ் பவுண்டரிகளை அடித்தார் அகர்வால். புஜாரா வழக்கம் போல் தன் பாணியில் அடித்தளம் அமைக்கும் இன்னிங்சை ஆடிவருகிறார்.

 

புஜாராவுக்கு ஒருமுறை கமின்ஸ் பந்து ஒன்று உள்ளே வெகுதூரம் ஸ்விங் ஆகி மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து சென்றது, பார்க்க எட்ஜ் போல் தெரிந்ததால் 3வது நடுவரிடம் சென்றது, ஆனால் நாட் அவுட். ஆனால் அவரும் உணவு இடைவேளைக்கு முன்பாக ஹேசில்வுட் பவுன்சரில் கண்ணை எடுக்க பந்து ஹெல்மெட் பின்புறத்தைத் தாக்கியது. ஸ்டம்பில் விழுந்திருக்கும் தப்பினார்.  மீண்டும் மெல்போர்ன் போல் ஒரு நல்ல ஸ்கோரை எட்ட அடித்தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக இந்திய அணி பும்ரா, ஷமி ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய 2 ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஹேன்ட்ஸ்கம்ப், லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் லபுஷான் வந்துள்ளனர்.

 

உணவு இடைவேளையின் போது மயங்க் அகர்வால் 42 ரன்களுடனும் புஜாரா 19 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x