Published : 18 Dec 2018 01:07 PM
Last Updated : 18 Dec 2018 01:07 PM

16 பந்துகளில் அதிரடி அரைசதம் : ஷேய் ஹோப் சாதனையில் வங்கதேசம் படுதோல்வி: மவுனியான வங்கதேச ரசிகர்கள்

வங்கதேச சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச அணியை, மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். ஆனால் மே.இ.தீவுகள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் வேறு யோசனை வைத்திருந்தார் அவர் 4 ஒவர்களில் 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, ஷாகிப் அல் ஹசனின் 61 ரன்களாலும் மீள முடியாமல் 129 ரன்களுக்குச் சுருண்டது.  ஷெல்டன் காட்ரெலின் காட்டுத்தனமான ஷார்ட் பிட்ச் பந்துகளில் வங்கதேசம் திக்குமுக்காடியது .

மஹ்முதுல்லா 12, ஆரிபுல் ஹக் 17, மற்றெல்லோரும் ஒற்றை இலக்கத்தில் காலியாகினர்.  தமிம் இக்பால் (5), சவுமியா சர்க்கார் (5), ஷாகிப் (61), மஹ்முதுல்லா (12) ஆகியோர் விக்கெட்டுகளை காட்ரெல் வீழ்த்தினார்.. முஷ்பிகுர் ரஹிம் ரன் அவுட் ஆக மஹமுதுல்லா விக்கெட் விழும்போது 73/5 என்று தடுமாறியது வங்கதேசம். ஷாகிப் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்தார்.

மே.இ.தரப்பில் காட்ரெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கீமோ பால் 2 விக்கெட்டுகளையும் தாமஸ், பிராத்வெய்ட், ஆலன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

130 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொண்ட மே.இ.தீவுகள் எவின் லூயிஸ் (18)  ஷேய் ஹோப் மூலம் 3.2 ஒவர்களில் 51 என்று காட்டடி தொடக்கம் கண்டனர்.

ஷேய் ஹோப் 6 சிக்சர்களையும் 3 பவுண்டரிகளையும் விளாசி 23 பந்துகளிலி 55 ரன்கள் என்று விளாசித் தள்ளிய இன்னிங்ஸில் 16 பந்துகளில் அரைசதம் கண்டு யுவராஜ் சிங் (12 பந்து), கொலின் மன்ரோ (14) ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிவேக டி20 அரைசதப் பட்டிஅலில் இணைந்தார்.

எவின் லூயிஸுடன் 3.2 ஓவர்களில் 51, பிறகு நிகோலஸ் பூரனுடன் சேர்ந்து (23), 26 பந்துகளில் 47 ரன்கள் கூட்டணியை ஷேய் ஹோப் அமைக்க ஆட்டம் 10.5 ஒவர்களில் 130/2 என்று முடிந்தது. மே.இ.தீவுகளுக்கு மிகப்பெரிய வெற்றி. கீமோ பால் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 14 பந்துகளில் 28 விளாசினார். மே.இ.தீவுகள் அடித்த 10 சிக்சர்களில் வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் மட்டும் 5 சிக்சர்கள் வாரி வழங்கினார்.  முஸ்தபிசுர் ரஹிம் ஒரே ஓவரில் 15 ரன்கள் வழங்கினார். மஹ்முதுல்லா மட்டுமே 2 ஓவர் 13 ரன் ஒரு விக்கெட் என்று சாத்திலிருந்து தப்பினார்.

பொதுவாக வங்கதேசம் 1 அடித்தால் சிக்ஸ் போல் ஆரவாரம் செய்யும் வங்கதேச ரசிகர்கள் இன்று ஷேய் ஹோப், கீமோ பால் அதிரடியில் வாய் மூடி மவுனியாகிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x