Last Updated : 21 Dec, 2018 12:23 PM

 

Published : 21 Dec 2018 12:23 PM
Last Updated : 21 Dec 2018 12:23 PM

அடுத்த தடை: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் பங்களாதேஷ் ப்ரிமியர் லீக்கில் விளையாட அனுமதி மறுப்பு

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் டி20 போட்டியிலும் பங்கேற்க அந்நாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும், பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டு இருந்தது. இதில் பான்கிராஃப்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த மாதத்தோடு முடிகிறது. ஆனால், ஸ்மித், வார்னருக்கு மார்ச் மாதம் வரை தடை நீடிக்கும்.

இந்த தடையால் ஸ்மித், வார்னர் இருவரும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் செப்பீல்ட் ஷீல்ட், பிப்பாஷ் லீக் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இந்தத் தடை காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னர் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறும் பங்களாதேஷ் ப்ரிமியர் லீக்கில் கோமிலா விக்டோரியன்ஸ் அணியில் விளையாட ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால், ஸ்மித் பங்கேற்று விளையாடுவதற்கு சில அணிகளின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அவரை நீக்கி வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மித்துக்கு பதிலாக, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில், “ அணிகளின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால், பிபிஎல் தொடரில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டு வேறு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார் “ எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியில், சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணியில் விளையாட டேவிட் வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x