Published : 29 Dec 2018 08:52 PM
Last Updated : 29 Dec 2018 08:52 PM

விராட் கோலியிடமிருந்து கொஞ்சமாவது கற்றுக் கொள்ளுங்கள்: ஆஸி. பேட்டிங் பயிற்சியாளர் கிரேம் ஹிக்

இந்திய அணி 443 ரன்கள் அடித்த மெல்போர்ன் பிட்சில் ஆஸ்திரேலிய அணியினர் 151 ரன்களுக்குச் சுருண்டு தற்போது டெஸ்ட்டையும் தொடரையும் இழக்கும் நிலைக்கு சரிந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய கேப்டன் விராட் கோலியிடமிருந்து கொஞ்சமாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரேம் ஹிக் கூறியுள்ளார்.

 

விராட் கோலி முதல் இன்னிங்சில் திருப்திகரமாக ஆடாவிட்டாலும் பொறுமயின் ஊற்றுக்கண்ணாக இருந்து 82 ரன்களைச் சேர்த்தது மிக முக்கியப் பங்களிப்பு என்று கிரெம் ஹிக் கூறுகிறார். 204 பந்துகள் பொறுமையாக நின்று 82 ரன்களை அடித்த விராட் கோலி ஓரளவுக்கு அணியின் நிலை ஸ்திரமானவுடன் அப்பர் கட் செய்தார் ஆனால் அதில் துரதிர்ஷ்டவசமாக தேர்ட்மேனில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

இந்நிலையில் ஆஸி. பேட்டிங் பயிற்சியாளர் கிரேம் ஹிக், ஆஸி. ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருப்பதாவது:

 

“கோலி எப்படி இன்னிங்சை கொண்டு போனார் என்பதை நாங்கள் விவாதித்தோம். அவருக்குச் சமமானவராக இல்லாவிட்டாலும் ஆஸி. வீரர்கள் அவரைப்பார்த்து கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

 

அவரிடமிருந்து நம் வீரர்கள் சிலவற்றை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.  அவரது இன்னிங்ஸில் இருந்த கட்டுக்கோப்பு கற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.  கோலி அடித்து ஆடக்கூடியவர், ஆனால் அவர் அன்று கட்டுப்படுத்திக் கொண்டு ஆடினார்.

 

நம் பேட்டிங் வரிசை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  எனக்கு ஏமாற்றமளிக்கிறது... ஒரு பேட்டிங் பயிற்சியாளராக எவ்வளவோ முயற்சி எடுத்து சரியான விஷயங்களைச் செய்கிறோம், சிறிது காலத்தில் வீரர்கள் கற்றுக் கொள்வார்கள் என்றுதானே முயற்சி செய்கிறோம்.

 

துரதிர்ஷ்டவசமாக மெல்போர்ன் நடுக்களத்தில் கற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லாமல் போய் விட்டது.

 

இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் நிறைய சர்வதேச கிரிக்கெட்டை ஆடி டாப் ஃபார்மில் இருக்கின்றனர். ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாதது அணியை பலவீனப்படுத்தியது உண்மைதான். ஆனால் ஆஸி. பேட்டிங் வரிசை வேறொரு நிலையில் உள்ளது.” என்று கிரேம் ஹிக் வேதனை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x