Published : 08 Dec 2018 09:14 PM
Last Updated : 08 Dec 2018 09:14 PM

உலகக்கோப்பை ஹாக்கி 2018:  கடைசி கால்மணி ஆட்டத்தில் அடுத்தடுத்து கோல்கள்; கனடாவை வீழ்த்தி காலிறுதியில் இந்தியா

உலகக்கோப்பை ஹாக்கியில் கனடாவை இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிவு சியில் பெல்ஜியத்தை கோல் வித்தியாச அடிப்படையில் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

முந்தைய போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக த்ரில் ட்ரா செய்த இந்திய அணி இதுவரை தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியமும்  இந்தியா போலவே 4 புள்ளிகள் பெற்றுள்ளது, ஆனால் கோல்கள் வித்தியாசத்தினால் இந்திய அணி பிரிவு சியில் முதலிடம் பெற்றது, இதனையடுத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

இன்று 1-3-4-3 என்ற களவியூகத்தில் தொடங்கிய இந்திய அணி படு ஆக்ரோஷமாக ஆடி கடைசி கால்மணி நேர ஆட்டத்தில் 4 கோல்களை அடித்து கனடாவை நொறுக்கியது. தொடக்க கணம் முதலே பந்து இந்திய ஸ்டிக்குகளில்தான் அதிகம் புழங்கியது, கனடா தடுப்பாட்ட வீரர்களும் நடுக்கள வீரர்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். முதல் அடியை சிங்லெனா சிங் வலது புறத்திலிருந்து கோலை நோக்கி அடிக்க கனடா அணி கோல் கீப்பர் ஆண்டனி கிண்ட்லர் தடுத்துவிட்டார். பிறகு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு ஆனால் கோலாகவில்லை.

ஆனால் தன் பிறகு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை ரெஃபரல் மூலம் இந்தியா பெற ஹர்மன்ப்ரீத் சிங் பிரமாதமான ஒரு ட்ராக் பிளிக்கை அரக்கத்தனமாக அடிக்க முதல் கோல் விழுந்தது.

ஆனால் பிறகு பரபரப்பான இரு அணிகளின் ஆட்டத்தில் 39வது நிமிடத்தில் கனடா வீரர் புளோரிஸ் வான் சன் மிகப்பிரமாதமாக இந்திய கோல் கீப்பர் தலைக்கு மேல் ஒரு ஸ்கூப் ஷாட் அடித்து கோலுக்குள் திணிக்க கனடா 1-1 என்று சமன் செய்தது.

46வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்ளென்சனா ஒரு பிரமாதமான கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். இந்தியா 2-1.  உடனேயே 47வது நிமிடத்தில் கனடா தடுப்பாட்ட வீரர் ஒருவர் பந்தைக் கோட்டை விட லலித்குமார் உடனடியாகப் பாய்ந்து பந்தைக் கோலுக்குள் திணிக்க இந்தியா 3-1. 

ஆட்டத்தின் 51வது நிமிடத்தில்  கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அமித் ரோஹிதாஸ் அதிரடி கோலை அடிக்க இந்திய அணி 4-1 என்று முன்னிலை வகித்தது.  57வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து சுமித் பந்தை விறுவிறுவென எடுத்து வந்து ஓடியபடியே பாஸ் செய்ய லலித் குமார் தன் 2வது கோலை அடிக்க இந்திய அணி 5-1 என்று முடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x