Published : 26 Dec 2018 06:17 PM
Last Updated : 26 Dec 2018 06:17 PM

47 ரன்களிலேயே 24 பந்துகள் நிற்க வைக்கப்பட்ட  விராட் கோலி; இந்திய-ஆஸி. போட்டிகளில் அதிக ரசிகர்கள்: முதல் நாள் சுவாரஸ்யங்கள்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இதுவரை இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளுக்கு இல்லாதவகையில் 73,000 ரசிகர்களுக்கும் மேல் வருகை தந்து டெஸ்ட் போட்டியை குதூகலமாக்கியுள்ளனர். இவர்கள் கோலியைப் பார்க்க வந்ததாக ஆஸி. ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

 

மெல்போர்ன் பிட்ச் சில காலங்களாகவே மந்தமான பிட்சாக அமைக்கப்படுகிறது, இந்தப் பிட்சும் விதிவிலக்கல்ல, ஆனால் கடைசியில் ஒரு பந்து எகிறியதைப் பார்க்கும் போது நாளை மாறுமோ என்ற சந்தேகமும் உள்ளது. இதில் விராட் கோலி டாஸ் வென்று மிகப்பிரமாதமாக முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது பயனளித்தது.

 

முதல் நாள் ஆட்டத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக ஹனுமா விஹாரி தொடக்க வீரராக இறக்கப்பட்டார், இது அவருக்கு இழைக்கப்படும் அநியாயம் என்று வி.வி.எஸ். லஷ்மண் ஆட்டம் முடிந்த பிறகு கிரிக் இன்போ இணையதளத்தில் தெரிவித்தார்.

 

உண்மைதான். ஒரு புறம் கருண் நாயர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை, எங்கிருந்தோ ஹனுமா விஹாரியை அழைத்து வந்து அவரும் ஒரு டவுனில் கிட்டத்தட்ட சுமாராக நிலைத்து ஆடிவரும் நிலையில் அவரைக் கொண்டு போய் தொடக்கத்தில் இறக்குவது, அணியில் இருக்க வேண்டுமானால் நாங்கள் கூறுவதைச் செய் என்பது போல் ஒற்றை எதேச்சதிகார இந்திய அணி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.

 

அவர் 66 பந்துகளைச் சந்தித்து தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றினார்,  ஆனால் அவரது ஆட்டம் திருப்தியளிப்பதாக அமையவில்லை.  ஒரு மணி நேரம் விக்கெட் விழாமல் ஆடினார், கடைசியில் கமின்ஸின் பவுன்சர் ஒன்றில் 70-80களின் ஹெல்மெட் இல்லாத ஆட்டக்காரர் போல் மட்டையை முகத்திற்கு அருகே கொண்டு சென்று பாதுகாக்கும் முயற்சியில் பந்து பட்டு எங்கு போனதென்றே பாவம் விஹாரிக்குத் தெரியவில்லை. ஓஹோ கேட்ச்தானா அது என்று அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

 

மந்தமான பிட்ச் மயங்க் அகர்வாலுக்குக் கைகொடுத்தது. முதல் 17 ரன்கள் நன்றாக வந்தது, முதல் பவுண்டரி எட்ஜில் வந்தது. பாட் கமின்ஸை மயங்க் அகர்வால் அவ்வளவு சவுகரியமாக ஆடவில்லை. ஆனால் மயங்க் அகர்வால் நேதன் லயனை எப்படி ஆடுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார், 2 பவுண்டரிகள் 1 சிக்சரை அடுத்தடுத்து அடித்தார். கிட்டத்தட்ட லஷ்மணைப் போல் லயனை ஆடினார் அகர்வால். கடைசியில் பாட் கமின்ஸ் லெக் திசை பவுன்சரை அப்படியா ஆடுவது? பந்தின் உயரத்துக்கு மட்டையையும் உயர்த்தி ஆடித் தடுத்தாட முடியுமா? அப்படிச் செய்யப்போய்தான் அவர் ஹூக்கில் பவுண்டரிக்கு அனுப்ப வேண்டிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் இவருக்கு தொடக்க வீரராக நல்ல எதிர்காலம் இருக்கிறது.  எத்தனை அறிமுக தொடக்க வீரர்கள் இந்த தரமான பந்து வீச்சில் முதல் நாள் ஆஸி. பிட்சில் 76 ரன்களை எடுத்துள்ளனர்.

 

புஜாரா மீண்டும் ஒரு தூணாக நின்றார், சவுகரியமாக ஆடுகிறார், பேத்தல், பிதற்றல் இல்லை.  ஆனால் நேர் நேர் தேமா பவுலர் மிட்செல் மார்ஷை கொஞ்சம் அடித்து ஆடியிருக்க வேண்டும். அதனால்தன நாள் முழுதும் ஆடியும் 89 ஓவர்களில் 215 ரன்கள்தான் வந்துள்ளது. மார்ஷ் 15 ஒவர்களில் 23 ரன்களையே கொடுக்கும் அளவுக்கு பெரிய பவுலிங் எல்லாம் செய்யவில்லை. அவரைக் கொஞ்சம் அடித்து ஆடியிருக்கலாம், சிலபல ஓவர்பிட்ச், ஆஃப் வாலி பந்துகளைக் கூட ரன் இல்லாமல் ஆக்கினர்.

 

ஆனால் கோலி மிக அனாயசமாக ஆடினாலும், லயனைக் கொஞ்சம் தடவினார்,  ஒரு ஆவலாதி எல்.பி.முறையீட்டில் ஆஸ்திரேலியா ஒரு டி.ஆர்.எஸ். வாய்ப்பை இழந்தது. அதாவது அவர்கள் விராட் கோலி விக்கெட் மீது எப்படி குறியாக இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

 

கோலி ஒருமுறை கமின்ஸ் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆகத்தெரிந்தார். ஜோஷ் ஹேசல்வுட் பந்தில் கோலிக்கு எடுத்த எட்ஜ் ஒன்று ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது.

 

ஆனால் 2வது புதிய பந்து எடுத்த பிறகு ‘கிங்’ கோலி  சாமானியக் கோலியாக்கப்பட்டார். 87வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க், கோலியைப் படுத்தி எடுத்தார். முதல் பந்தை பிளிக் செய்ய முயன்று பேடில் வாங்கினார். அது உயரமாகச் சென்றதால் தப்பினார் கோலி.  அடுத்ததாக வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்ய டிம் பெய்ன் டைவ் அடித்தும் பந்து அவர் கையில் சிக்கவில்லை, தப்பினார் விராட். அடுத்த பந்து பிட்ச் மாறிவிட்டதோ என்பதற்கு ஏற்ப நல்ல அளவில் விழுந்து எழும்பி விக்கெட் கீப்பரையும் தாண்டி ‘பை’ ஆனது. அடுத்த பந்தை இன்னும் வேகம் கூட்டினார் மிட்செல் ஸ்டார்க், ஸ்பீடா மீட்டரில் 150 கிமீ வேகம் காட்டிய அந்தப் பந்தை பிளிக் செய்ய முயன்று பீட்டன் ஆனார் கோலி, விக்கெட் கீப்பர் பெய்ன் கேட்சுக்கு முறையீடு எழுப்பினார். இப்படியாக இந்த ஓவரில் என்ன நடந்தது என்று கோலிக்கு ஒன்றும் புரியவில்லை, அவரை ஸ்டார்க் கடுமையாகக் குழப்பிவிட்டார்.  புதிய பந்து எடுத்த முதல் பந்தே விராட் கோலி பீட்டன் ஆனார்.

 

மொத்தம் 24 பந்துகள் ‘கிங்’ கோலி 47 ரன்களிலேயே நிற்கவைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் டிம் பெய்ன் விட்ட கடினமான வாய்ப்பு தவிர கேட்ச் என்று விடவில்லை, ஆனால் வாய்ப்புகள் பல பீல்டர் கைகளுக்குச் செல்லவில்லை. கடைசியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில் பிட்ச் காலையிலிருந்து ஆடியதை விட வித்தியாசம் காட்டியது, நாளையும் இப்படிக் காட்டினால் வந்தவுடன் புஜாரா, கோலியை அவர்கள் வீழ்த்தி விட்டால் இந்திய அணி 300 ரன்களுக்குத் திண்டாடும், ஆனால் இப்போதைக்கு இந்திய அணியே வலுவான நிலையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x