Published : 18 Dec 2018 08:32 AM
Last Updated : 18 Dec 2018 08:32 AM

சிஎஸ்கே வசம் செல்வாரா யுவராஜ் சிங்?: இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்: 346 வீரர்கள் காத்திருப்பு

2019-ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. 346 வீரர்கள் பங்கேற்றும் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்களான யுவராஜ் சிங், முகமது ஷமி, உனத்கட் உள்ளிட்ட வீரர்களை எந்த அணி ஏலம் எடுக்கப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏறக்குறைய 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கிறது என்பதால், இன்றைய ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஏலம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலும், உலகக்கோப்பைப் போட்டியும் வருவதால், ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் எந்த அளவுக்கு அதிகமாகப் பங்கேற்பார்கள் என்று இப்போதுள்ள நிலையில் தெளிவாகக் கூற இயலாது. ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணியில் பெரும்பாலான வீரர்கள் பங்கேற்கமாட்டர்கள்என்று தெரிகிறது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 2019 ஏப்ரல் 23 வரையிலும், இங்கிலாந்து, இலங்கை வீரர்கள் மே 10-ம் தேதி வரையிலும் மட்டுமே மற்ற லீக் போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டி நடக்கும் நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், பெரும்பாலும் போட்டி தென் ஆப்பிரிக்கா, அல்லது ஐக்கி அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடத்தவே வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடத்தில் 15 காலியிடங்கள் இருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர் அணியில் 12 காலியிடங்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 10 காலியிடங்களும், டெல்லி கேபிடல்ஸ்அணியில் 10 காலியிடங்களும் உள்ளன.ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை எத்தனை வீரர்களை எடுக்கப்போகிறார்கள் என்பது ஏலத்தில்தான் தெரியும்.

சிஎஸ்கேவுக்கு செல்வாரா யுவராஜ்?

ஒரு நேரத்தில் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங், முந்தைய சீசனில் அடிப்படை விலையாக ரூ.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப்பால் வாங்கப்பட்டார். கிறிஸ் கெயில் சிறப்பாக ஆடிய நிலையில், யுவராஜ் சிங் சரிவர ஆடவில்லை. இதனால் பஞ்சாப் அணி அவரை விடுவித்து விட்டது. கடைசியாக 2017-இல் இந்திய அணியில் இடம் பெற்ற யுவராஜ் தற்போதைய சீசனில் தனது அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயித்துள்ளார். அவருடன் ரித்திமன் சாஹா, முகமது சமி, அக்ஸர் பட்டேல் ஆகியோரும் ரூ.1 கோடி நிர்ணயித்துள்ளனர்.ஐபிஎல் ஏலத்தில் 346 இந்திய வீரர்கள் உள்ளபோதிலும் ஒருவர் கூட அடிப்படை விலையான ரூ.2 கோடி வரம்பில் வரவில்லை

9 வெளிநாட்டு வீரர்கள்

அடிப்படைவிலையான ரூ.2 கோடியில் பிரென்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், லசித் மலிங்கா, ஷான் மார்ஷ், சாம் கர்ரன், காலின் இங்கிராம், கோரி ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ், டி ஆர்சி ஷார்ட் உள்ளிட்ட 9 வெளிநாட்டு வீரர்கள் வருகின்றனர்.ஸ்டெய்ன், மோர்ன் மொர்கல், ஜானி பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ரூ.1.5 கோடியிலும் வருகின்றனர்.வெளிநாட்டு வீரர்களுக்காக 20 இடங்கள் உள்ள நிலையில், மொத்தம் 70 வீரர்கள் ஏலத்தில் வாங்கலாம்.

யாரிடம் எவ்வளவு பணம் இருப்பு?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.36.2 கோடி, தில்லி கேபிட்டல்ஸ் ரூ.25.5 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.20.95 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.18.15 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.15.2 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.10.65 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.9.70 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.8.40 கோடி செலவிட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x