Last Updated : 21 Dec, 2018 08:39 AM

 

Published : 21 Dec 2018 08:39 AM
Last Updated : 21 Dec 2018 08:39 AM

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தமிழகத்தின் டபிள்யு.வி.ராமன் நியமனம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யு.வி.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கறிிஸ்டன் பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, அவருடன் ஸ்கைப் மூலம் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது அவர் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த பணியை ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், அடுத்த இடத்தில் இருந்த 53வயதான டபிள்யு.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிவரும் ராமன், அடுத்த மாதம் மகளிர் அணியுடன் நியூசிலாந்துக்கு முதல் தொடருக்காகச் செல்ல உள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருந்த ரமேஷ் பவாரின் காலம் முடிந்ததையடுத்து புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. இதற்காக முன்னாள் வீரர்கள் கபில்தேவ், அன்சுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தேர்வு நடந்தது. இந்த தேர்வில் கேரி கிரிஸ்டன், வெங்கடேஷ் பிரசாத், டபிள்யு வி. ராமன் ஆகியோர் பெயர் இறுதியாக பிசிசிஐக்கு பரிந்துரைக்கப்பட்டுப் பரிசீலிக்கப்பட்டது.

இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ள இயலாத சூழலில் கிறிஸ்டன் இருப்பதாகத் தெரிவித்துவிட்டார். தற்போது ஐபிஎல் போட்டியில் அணிக்குப் பயிற்சியாளர் பணியில் இருப்பதால், சூழல் இல்லை என்பதாலும், இரு அணிக்கு ஒரேநேரத்தில் பணியாற்றுவது பிசிசிஐ விதிகளுக்கு முரணானது என்பதாலும் அவரைத் தேர்வு செய்யவில்லை.

அதேசமயம், கிரிஸ்டன் வருவதாக இருந்திருந்தால், அவரைத்தான் தேர்வு செய்திருப்போம். ஆனால், அவர் முடியாது எனத் தெரிவித்ததால், ராமனுக்கு வழங்கினோம்” எனத் தெரிவித்தார்

இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 23 ஒருநாள் போட்டிகளிலும் டபிள்யு வி ராமன் விளையாடியுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ரஞ்சி அணிகளுக்குப் பயிற்சியாளராகவும், 19 வயதுக்குட்பட்ட அணிக்குப் பயிற்சியாளராகவும் ராமன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழகத்துக்காக 132 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 6,490 ரன்கள் வரை ராமன் குவித்துள்ளார்

கடந்த 1992-93-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில் ராமன் சதம் அடித்த நிகழ்வை இன்னும் யாராலும் மறக்கமுடியாது. கடைசியாக 1997-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடர் ராமன் இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x