Published : 23 Dec 2018 05:37 PM
Last Updated : 23 Dec 2018 05:37 PM

பாக்ஸிங்டே டெஸ்ட்: ஆஸி. அணியில்  7 வயது சிறுவன் சேர்ப்பு; யார் இந்த இளம்வீரர் ?

மெல்போர்னில் 26-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவும் 'பாக்ஸிங்டே' டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 7-வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

7வயதாகும் ஆர்ச்சி சில்லர் சிறப்பாக லெக் ஸ்பின் வீசக்கடியவர் என்பதால், 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்ட் டெஸ்ட், பெர்த் டெஸ்ட் ஆகியவற்றில் நாதன் லயானுடன் பயிற்சி எடுத்த ஆர்ச்சி சில்லர் 3-வது டெஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உறுதி செய்துள்ளனர்.

மெல்போர்னில் யாரா பார்க்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று நடந்த கோடைகால விழாவில் ஆஸ்திரேலிய, இந்திய அணியினர் பங்கேற்றனர். அப்போது, பார்டர், கவாஸ்கர் கோப்பை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போதுதான் 7வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டு, அணியில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

யார் இந்த ஆர்ச்சி சில்லர்?

archiejpgஆர்ச்சி சில்லர் 100 

 

ஆர்ச்சி சில்லர் பிறக்கும் போதே இதயவால்வில் பல்வேறு சிக்கல்களோடு பிறந்தவன். 7வயதுக்குள் அவனுக்கு பல்வேறு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு விட்டன. ஆர்ச்சிசில்லரின் உடல்நிலை காரணமாக இயல்பான குழந்தைகள் போல் வெளியில் ஓடி, ஆடி கிரிக்கெட் விளையாட முடியாது, எந்த விதமான விளையாட்டுக்களையும் தனது விருப்பத்துக்கு ஆர்ச்சி சில்லரால் விளையாட முடியாது. இதனால் பள்ளிக்கூடம் செல்வதைக் கூட ஆர்ச்சி சில்லர் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறான்.

ஆனால், ஆர்ச்சி சில்லருக்கு கிரிக்கெட் என்றால் ஆசை, அதிலும் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் மிகவும் பிடிக்கும். 

ஒருநாள் ஆர்ச்சி சில்லரின் தந்தை அவனிடம் "உன்னுடைய ஆசை என்ன" என்று கேட்டுள்ளார். "தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேண்டும்" என்று ஆர்ச்சி சில்லர் கூறியுள்ளார். இதையடுத்து, ஆர்ச்சி சில்லரின் தந்தை ஒரு தன்னார் தொண்டுநிறுவனத்திடம் கூறி, ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் கூறி ஆசையை நிறைவேற்றக் கூறியுள்ளார்.

சிறுவன் ஆர்ச்சி சில்லரின் ஆசையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் நிறைவேற்ற முன்வந்தது. இதையடுத்து, மெல்போர் யாரா பார்க்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டு, மெல்போன்ர் டெஸ்ட் போட்டிக்கு துணைக் கேப்டனாகவும் பொறுப்பேற்பார் என்று அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியிலும் ஆர்ச்சி சில்லரை அறிமுகம் செய்து வைத்து அவரை கோலியும், பெய்னும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள். ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில், “ வாழ்வின் கடினமான நாட்களை சில்லர் கடந்திருக்கிறான். அவனின் முகத்தில் மகிழ்ச்சியை காண இது ஒரு வாய்ப்பாக அமையும்” எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x