Last Updated : 09 Nov, 2018 12:57 PM

 

Published : 09 Nov 2018 12:57 PM
Last Updated : 09 Nov 2018 12:57 PM

சென்னை டி20 போட்டி: 3 மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு

சென்னையில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணியில் 3 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 2-0 என்ற வெற்றியுடன் இந்தத் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.

இந்நிலையில், 3-வது டி20 போட்டி சென்னையில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் 3 முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளித்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எதிர்வரும் ஆஸ்திரேலியத் தொடருக்கு வீரர்கள் சிறப்பாகத் தயாராகும் நோக்கில் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் அமிதாப் சவுத்ரி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 21-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியத் தொடருக்கு இந்திய வீரர்கள் சிறப்பாகத் தயாராகும் வகையில், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்குச் சென்னையில் நடைபெறும் 3-வது டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

சித்தார்த் கவுல் கடந்த ஜூன் மாதம் டப்லின் நகரில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். இப்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி தனது பயிற்சிக்காகச் சென்னைக்கு நாளை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் தங்களின் பயிற்சியை இன்று மின்னொளியில் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மேற்கொள்ள உள்ளனர்.

இந்திய அணி விவரம்(3-வது டி20):

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஷான்பாஸ் நதீம், சித்தார்த் கவுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x