Published : 11 Nov 2018 09:46 PM
Last Updated : 11 Nov 2018 09:46 PM

பூரன், பிராவோ விளாசல்; எடுபடாத இந்தியப் பந்துவீச்சு: 182 ரன்கள் இலக்கு

சென்னையில் நடந்துவரும் 3-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

வானவேடிக்கை நிகழ்த்திய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பிராவோ 43 ரன்களும், பூரன் 53 ரன்களும் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தனர்.

இந்திய அணியில் யஜுவேந்திர சாஹல் மட்டுமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். மற்ற பந்துவீச்சாளர்களான கலீல் அகமது, புவனேஷ்வர் குமார், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்து விட்டனர்.

டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஹோப், ஹெட்மெயர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். கடந்த இரு போட்டிகளிலும் சோபிக்காத ஹோப் இந்தப் போட்டியில் விளாசினார்.

கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர் ஓவர்களை ஹெட்மெயரும், ஹோப்பும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் அடித்துத் தள்ளினர். இதனால், 6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது அணி.

7-வது ஓவரை வீச சாஹல் அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே ‘டீப் மிட்விக்கெட்டில்’ சுந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹோப்(24). 51 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

சாஹல் வீசிய 9-வது ஓவரின் கடைசி பந்தில் ஹெட்மெயர் பந்தை அடிக்க அது ‘டீப் பேக்வார்ட் பாயின்ட்டில்’ நின்றிருந்த பாண்டியாவிடம் கேட்சானது. ஹெட்மெயர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு பிராவோ, ராம்தின் சேர்ந்தனர்.ஆனால், ராம்தின் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 15 ரன்கள் சேர்த்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின் பூரன், பிராவோவுடன் இணைந்தார். இருவரும் இந்திய வீரர்கள் பந்துவீச்சை பொளந்துவிட்டனர். 14-வது ஓவரில் இருந்து ஓவருக்கு 10ரன்கள் வீதம் சிக்ஸரும், பவுண்டரியும் பறந்தது.

குர்னல் பாண்டியா வீசிய 16-வது ஓவரில் பூரன் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். சாஹல் வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸரை பூரன் விளாசினார். கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்த பூரன், 24 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. பூரன் 25 பந்துகளில் 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். பிராவோ 37 பந்துகளில் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியத் தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x