Published : 18 Nov 2018 09:05 PM
Last Updated : 18 Nov 2018 09:05 PM

தோனி குறித்து வி.வி.எஸ் லட்சுமண் உருக்கம்: என் 100-வது போட்டியில் எனக்காக பஸ் ஓட்டினார்

என்னுடைய 100-வது போட்டியில் என்னைக் கவுரவப்படுத்தும் நோக்கில், அணி வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற தோனி ஹோட்டலுக்கு ஓட்டி வந்தார் என்று வி.வி.எஸ். லட்சுமண் உருக்கமுடன் தெரிவித்தார்.

இந்திய அணியில் அசாரூதீனுக்கு அடுத்து ரிஸ்ட் பிளேயர் என்று அழைக்கப்படக் கூடியவர் வி.வி.எஸ்.லட்சுமண். 134 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள லட்சுமண், 8,781 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 17 சதங்கள், 56 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சம் 281 ரன்கள். ஒருநாள் போட்டியில் 86 போட்டிகளில் விளையாடி 2,338 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்களும், 10 அரைசதங்களும் அடங்கும்.

இந்நிலையில் வி.வி.எஸ். லட்சுமண், '281 அன்ட் பியாண்ட்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையில் தான் சந்தித்த வீரர்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை லட்சுமண் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் கிரிக்கெட்டில் தோனியுடன் தன்னுடைய நாட்கள் என்ற பகுதியில் தோனியுடன் தான் செலவழித்த நாட்களையும், கிடைத்த ருசிகரமான அனுபவங்களையும் தெரிவித்துள்ளார்.

அதில் தோனி குறித்து லட்சுமண் முக்கியமாகக் குறிப்பிடுவது, தோனி தன்னுடைய ஜூனியர் வீரர்களை மட்டும் ஊக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய சீனியர் வீரர்களையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் பெருந்தன்மை கொண்டவர் என்று பாராட்டியுள்ளார்.

அந்தப் புத்தகத்தில் தோனி குறித்து வி.வி.எஸ்.லட்சுமண் கூறியிருப்பதாவது:

''நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி எனக்கு 100-வது டெஸ்ட் போட்டி. அந்தப் போட்டியில் நான் சதம் அடித்தேன். அனில் கும்ப்ளே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும், அடுத்ததாக தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். என்னுடைய 100-வது டெஸ்ட் போட்டிதான் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டி.

போட்டி முடிந்ததும் வீரர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும், டிரைவரின் இருக்கைக்குச் சென்ற தோனி, ஓட்டுநரை எழுப்பிவிட்டுத் தானே பஸ்ஸை இயக்கினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது. தோனியின் விளையாட்டுத்தனத்தைப் பார்த்து வியப்படைந்தேன். நாக்பூரில் இருந்து ஹோட்டல் வரை தோனியே பஸ்ஸை ஓட்டிவந்தார். தோனி பஸ் ஓட்டியதைப் பார்த்து என்னால் நம்ப முடியவில்லை. அணியின் கேப்டன், ஜாலியாக அமர்ந்து வர வேண்டியவர் பஸ் ஓட்டுகிறார் என்று அதிர்ச்சியாக இருந்து.

தோனி இந்த உலகில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், அந்தத் தருணத்தில் தனக்குப் பிடித்த செயலையும், எனக்காகவும் செய்தது எனக்குப் பிடித்திருந்து. மிகவும் விளையாட்டுத்தனமான மனிதர் தோனி. எப்போதும் மகிழ்ச்சியாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்வித்துக் கொண்டே இருப்பார். இதுபோன்ற சிறந்த மனிதரை இதற்கு முன் நான் சந்தித்ததில்லை.

2011-ம் ஆண்டு வெளிநாட்டுப் பயணத்தின் போது நான் சரியாக பேட் செய்யாமல் மனவேதனைப்பட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தியவர் தோனி. 2011-ம் ஆண்டு இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலியத் தொடரிலும் சரிவரச் செயல்பட முடியாமல் திணறியது. ஆனால், தோனி கடைசிவரை தனது அமைதியை இழக்காமல், கோபப்படாமல் கேப்டன் பொறுப்பில் திறமையாகச் செயல்பட்டார்.

தோனியின் அமைதி, சாந்தமான பண்பு மிகச்சிறப்பானது. இங்கிலாந்து தொடரில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அவர் முகத்தில் ஒருபோதும் வருத்தமில்லை. இங்கிலாந்திடம் தொடரை இழந்து, ஆஸ்திரேலியாவிடம் தொடர்ந்து இழந்து அனைத்து வீரர்களும் குழப்பத்துடன், நம்பிக்கை இழந்த நேரத்தில் அணி வீரர்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி ஊக்கம் பெறச் செய்தவர் தோனி. எந்தத் தருணத்திலும் தோனி வீரர்களிடமும், களத்திலும் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை.

நான் இந்த அளவுக்கு உயர்ந்ததை நினைத்து பெருமைப்பட்டாலும், தோனி என்னைக் காட்டிலும் அடுத்த கட்டத்துக்கு உயர்ந்தவர். எந்தவிதமான அழுத்தமான சூழலையும், நெருக்கடியான மனநிலையையும் எளிதாகக் கையாண்டு வெற்றி பெறக்கூடியவர் தோனி''.

இவ்வாறு லட்சுமண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x