Published : 18 Nov 2018 08:11 PM
Last Updated : 18 Nov 2018 08:11 PM

மன்னிப்பு கோரிய ஜோ ரூட்: பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா

இங்கிலாந்து ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்த அறையை வீரர்ரகளுக்காக எடுத்துக் கொண்டு அவர்களை வேறு ஹோட்டலுக்கு இலங்கை அரசு அனுப்பியதற்காக இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட் ரசிகர்களிடம் தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட்டின் பெருந்தன்மையான செயலைப் பாராட்டி இந்திய வீரர் ரோஹித் சர்மா ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார்.

இலங்கைக்கு இங்கிலாந்து அணி பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கையின் கண்டி நகரில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியைக் காண்பதற்காக இங்கிலாந்து ரசிகர்கள் 100 பேர் பல மாதங்களுக்கு முன்பே மைதானத்துக்கு அருகே இருக்கும் இயர்ல்ஸ் ரெஜென்சி ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்து, பணமும் செலுத்தி இருந்தனர். போட்டியைக் காணஆவலாகவும் இலங்கைக்கு வந்திருந்தனர்.

ஆனால், போட்டி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், இலங்கை கிரிக்கெட் வாரியம், இலங்கை, இங்கிலாந்து வீரர்கள் தங்கவதற்காக அந்த ஹோட்டல் அறைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டது. வேறு யாரையும் தங்க அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே முன்பதிவு செய்து, பணமும் செலுத்தி இருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கும் பணம் திருப்பி அளிக்கப்பட்டு, கண்டியில் இருந்து ஏறக்குறைய 3 மணிநேரம் பயணத்தில் இருக்கும் மற்றொரு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்தச் செயல் இங்கிலாந்து ரசிகர்களை வெகுவாகப் பாதித்தது. ரசிகர்கள் கோபமும், விரக்தியும் அடைந்தனர்.

இது குறித்து இங்கிலாந்து அணி வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். விடுமுறைக்காக இலங்கை வந்த தங்களுடைய நாட்டு மக்கள், தங்கள் கிரிக்கெட் போட்டியைக் காண வரும்போது ஏற்பட்ட அசவுகரியத்தை நினைத்து இங்கிலாந்து வீரர்கள் வருத்தப்பட்டனர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் மற்றும் வீரர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளின் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து ரசிகர்கள் 100 பேரையும் சந்தித்தனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள், தங்களின் நிலையைக் கூறி வருத்தம் தெரிவித்தனர்.

இதில் கேப்டன் ஜோய் ரூட், ரசிகர்கள் 100 பேரையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, தான் எழுதிய மன்னிப்பு கடிதத்தையும் அளித்தார். தங்களால் ஏற்பட்ட அசவுகரியக் குறைவுக்கு மன்னிக்கவும் என்று கேட்டுக்கொண்டார். ஜோட் ரூட்டின் இந்தச் செயலைப் பார்த்து அந்நாட்டு ரசிகர்கள் உள்ளம் குளிர்ந்து, வெகுவாகப் பாராட்டினார்கள்.

இந்தக் கடிதத்தில் ஜோட் ரூய் எழுதியதில், " எங்களின் விளையாட்டைப் பார்க்க வந்திருக்கும் உங்களிடம் இருந்து விசுவாசத்தையும், கட்டுப்பாட்டையும், எங்களுக்கு அளிக்கும் ஆதரவையும் உணர்ந்தோம். உலக கிரிக்கெட்டில் இதற்கு ஒப்பீடு கிடையாது.

 

ஆனால், கண்டி டெஸ்ட் போட்டியைக் காண வந்திருந்த உங்களுக்கு ஏற்பட்ட இயர்ல்ஸ் ரெஜின்ஸி ஹோட்டலில் ஏற்பட்ட சிரமங்கள், தங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. இந்தப் போட்டியைக் காண பல மாதங்களுக்குமுன்பே திட்டமிட்டீர்கள். ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல் குறித்து அறிந்ததும் மிகுந்த வியப்படைந்தோம். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து அறிந்துள்ளது. தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி" என்று எழுதி ஜோய் ரூட் ஒவ்வொரு கடிதத்துக்கும் கையொப்பமிட்டு அளித்துள்ளார்.

ரோஹித் சர்மா பாராட்டு

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த இந்திய வீரர் ரோஹித் சர்மா, இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட் மன்னிப்பு கேட்ட செயலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜோய் ரூட் உங்களின் சிறப்பான செயலைப் பாராட்டுகிறேன் என்று ரோஹித் சர்மா ட்விட்டரில் ஜோய் ரூட்டின் கடிதத்தை வெளியிட்டுப் பாராட்டியுள்ளார்.

இதற்கு முன்

இங்கிலாந்து ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பாரபட்சம் காட்டுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த 2001-ம் ஆண்டு வந்திருந்தபோது, இலங்கை ரசிகர்களுக்கு டிக்கெட் ஒருவிலையிலும், இங்கிலாந்து ரசிகர்களுக்குப் பல மடங்கு விலையிலும் டிக்கெட் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுவும் சர்ச்சையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x