Last Updated : 14 Nov, 2018 09:49 PM

 

Published : 14 Nov 2018 09:49 PM
Last Updated : 14 Nov 2018 09:49 PM

ஆஸியில் ஸ்மித், வார்னர் இல்லாதது இந்திய அணியில் கோலி, ரோஹித் இல்லாதது போன்றது: சவுரவ் கங்குலி கருத்து

ஆஸ்திரேலிய அணியில் டேவிட்ர் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாததற்கு சமம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இதில் பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் கிரிக்கெட் விளையாடத் தடையும், ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டுதடையும் விதிக்கப்பட்டது. இதில் வார்னர், ஸ்மித்துக்கு தடை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிகிறது. பான்கிராப்டுக்கு டிசம்பர் மாதம் முடிகிறது.

இதற்கிடையே அடுத்த இரு நாட்களில் ஆஸ்திரேலியா பயணத்துக்கு புறப்படும் இந்திய அணி அங்கு சென்று டி20 தொடர், டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் அச்சுறுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள் ஸ்மித், வார்னர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிறப்பம்சமாகும். ஆஸ்திரேலியாவில் இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத சூழலில் இப்போது இந்திய அணி வெல்வதற்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியின் இடையே கங்குலியிடம் இந்திய அணியின் ஆஸ்திரேலியப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது மிகப்பெரிய விஷயம். இவர்கள் இருவரும் அந்தஅணியில் இல்லாதது, இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாததற்கு சமம்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத சூழலில் இந்திய அணி அங்கு செல்வது ஆஸி மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு நல்ல வாய்ப்பாகும். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை மட்டும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய அணியில் பந்துவீச்சும், பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. ஆதலால், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்வதற்கு நல்லவாய்ப்பாகும். இங்கிலாந்து தொடரின் போது இந்திய வீரர்கள் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 20 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார்கள் என்பதால், பந்துவீச்சு ஆஸ்திரேலியாவில் சிறப்பாகஇருக்கும் என நம்புகிறோம்.

ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியைச் சந்திக்கும்போது இந்திய அணி கவனமாக விளையாட வேண்டும். ஸ்மித், வார்னர் இல்லாத சூழலில் ஆஸ்திரேலியஅணி வலுவிழந்த அணி என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்

விராட் கோலி சமீபத்தில் ரசிகரிடம் கோபமாக பேசி இந்திய வீரர்களை பிடிக்காத ரசிகர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்ற கருத்து குறித்து கங்குலியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த கங்குலி, இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கருத்துக்கும் பதில் கருத்து அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x