Published : 04 Nov 2018 12:39 AM
Last Updated : 04 Nov 2018 12:39 AM

முதல் டி 20 ஆட்டத்தில் இன்று கொல்கத்தாவில் இந்தியா - மே.இ.தீவுகள் மோதல்: கோலி, தோனி இல்லாமல் சமாளிக்குமா ரோஹித் படை?

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 எனவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-1என்ற கணக்கிலும் இந்திய அணிவென்றது. இந்நிலையில் இரு அணிகளும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

விராட் கோலி, தோனி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் டி 20 தொடரை சந்திக்கிறது இந்தியஅணி. சர்வதேச டி 20 ஆட்டங்களில் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில் அதிலும் சொந்த மண்ணில் அவர், இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது. டி 20ஆட்டங்களில் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு தொழில்முறை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்கள் என்பதால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அந்த அணி கடும் சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனான கார்லோஸ் பிராத்வெயிட், இதே ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் போது கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி இங்கிலாந்து அணியின் இதயத்தை நொறுங்கச் செய்து தனது அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருந்தார். டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்டு, ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் அணிக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இளம் அதிரடி வீரரான சிம்ரன் ஹெட்மையர் மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரில் சதம் உட்பட 259 ரன்கள் சேர்த்த அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

கடந்த 2009 முதல் 2017-ம்ஆண்டு வரை இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 7 டி 20 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில்மேற்கிந்தியத் தீவுகள் 5 ஆட்டங்களிலும், இந்தியா இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராககடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெறத் தவறியது. 2016-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கனவுகளை அரை இறுதிஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நீர்த்துபோகச் செய்தது. கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியிருந்தது.

இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடும் சவால்களை சந்திக்க நேரிடக்கூடும். இன்றைய ஆட்டம் நடைபெறும் ஈடன் கார்டன் மைதானம் ரோஹித் சர்மாவின் ரன்வேட்டையாடும் களமாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. 31 வயதான அவர், கடந்த2014-ம் ஆண்டு ஈடன் கார்டனில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள்விளாசி உலக சாதனை படைத்திருந்தார்.

சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 389 ரன்கள் விளாசிய ரோஹித்சர்மா, அந்த பார்மை அப்படியேடி 20 வடிவிலும் தொடரச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்னர் கேப்டனாக செயல்பட்டுள்ள தருணங்களில் ரோஹித் சர்மாவிடம் இருந்துகூடுதல் திறன் வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா 317 ரன்கள் குவித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்குவகித்தார். இதனால் ஒரு கேப்டனாக அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதில் அவர், தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

விராட் கோலி இல்லாத நிலையில் அவரது இடத்தில் கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது. தோனியின் விக்கெட் கீப்பிங் பணியை ரிஷப் பந்த் மேற்கொள்வார். இவர்களுடன் பேட்டிங்கில் மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். பந்து வீச்சில் வழக்கம் போன்று ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர், குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் இடம் பெறுவார்கள். ஆல்ரவுண்டர் வரிசையில் கிருணல் பாண்டியா களமிறங்க வாய்ப்பு உள்ளது.

விமானத்தை தவறவிட்ட ரஸல்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் லண்டன், துபாய் வழியாக இந்தியா வரவிருந்தார். ஆனால் விமானத்தை தவறவிட்டதால் அவர் தனது அணியினருடன் இன்னும் இணையவில்லை. அவர் இன்று காலை அணியினருடன் இணைந்துகொள்வார் என்று அணியின் ஊடக மேலாளர் தெரிவித்தார்.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ்.

மேற்கிந்தியத் தீவுகள்: கார்லோஸ் பிராத் வெயிட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, சிம்ரன் ஹெட்மையர், கீமோ பால்,கெய்ரன் பொலார்டு, தினேஷ் ரம்தின், ஆந்த்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஒஷேன் தாமஸ், ஹரி பியர்ரே, ஒபெட் மெக்காய், ரோவ்மான் பொவல், நிக்கோலஸ் போரன்.

நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x