Published : 12 Nov 2018 09:05 AM
Last Updated : 12 Nov 2018 09:05 AM

பிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’

சென்னையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் மே.இ.தீவுகள் 181 ரன்கள் விளாசியும் ஆறுதல் வெற்றி கூட பெற முடியாமல் தோல்வி தழுவி 3-0 என்று ஒயிட் வாஷ் ஆனது.

இந்தியப் பந்து வீச்சு மோசமாகி கடைசி 7 ஒவர்களில் 86 ரன்கள் விளாசப்பட்டது ஒரு புறமிருக்க, பிராத்வெய்ட் ஸ்பின் பிட்சில் வேகப்பந்து வீச்சை தேர்வு செய்தது ஏன் என்பதே நம் கேள்வி. கேரி பியருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுத்தது ஏன்? தெரியவில்லை.

மே.இ.தீவுகள் 181/3, பூரன், டேரன் பிராவோ அதிரடியில் இந்தியப் பந்து வீச்சு சிதறடிக்கப்பட்டது.  தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஷிகர் தவண் (92), ரிஷப் பந்த் (58) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 182/4 என்று வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

சென்னையில் சொந்த மண்ணில் கூட தினேஷ் கார்த்திக் முன்னால் களமிறக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் இந்திய அணி எளிதாக முடிக்கவில்லை என்பதுதான் புரியாத புதிர், 11 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற மிகச்சவுகரியமான நிலைகளில் கூட கடைசி பந்தில் மிஸ்பீல்டில்தான் வெற்றி பெற வேண்டிய நிலை.

ரிஷப் பந்த் ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஷாட் என்று வேகப்பந்து வீச்சாளர்களையே ஆடிக்கொண்டிருந்த போது 19வது ஓவரில் கீமோ பால் யார்க்கரில் இன்னொரு ரிவர்ஸ் ஷாட்டில் பவுல்டு ஆனார். பாண்டே இறங்கி அதே ஓவரில் 3 சரியான யார்க்கர்களில் ரன் எடுக்க முடியாமல் திணறினார். கடைசி பந்தும் யார்க்கர்தான் ஆனால் அதில் 2 ரன்கள் எடுத்தார் பாண்டே.  இதுவும் மிஸ்பீல்ட் தான்.

கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை ஷிகர் தவண், பாண்டே  முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தனர். அப்போது தவண் மிக அலட்சியமாக ஆடி ஒரு டாட் பால் கொடுத்தார். அடுத்த பந்தில் 62 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த நிலையில் பொலார்ட் கையில் கேட்ச் ஆகி வெளியேறினார். கார்த்திக் உள்நாட்டு ரசிகர்களின் பலத்த கரகோஷத்தில் இறக்கப்பட்டார், ஆனால் அவருக்கு ரன்னர் முனைதான் காத்திருந்தது. கடைசி பந்தில் பாண்டே மிட் ஆனை நோக்கித் தட்டிவிட பவுலர் ஆலனே அருமையாக பந்தை தடுத்தார், ஆனால் சரியாகத் தடுக்க முடியாமல் பந்து மிட்விக்கெட்டுக்குச் செல்ல இந்திய அணி வெற்றி ரன்னை எடுத்தது. தினேஷ் கார்த்திக் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளவில்லை, இவரைப்போன்ற ஒரு வீரருக்கு சொந்த மண்ணிலேயே இத்தகைய அவமானம் நிகழ்ந்துள்ளது.

பிராத்வெய்ட்டின் மவுட்டிக கேப்டன்சி:

பந்துகள் கண்டபடி திரும்பி வைடுகள் செல்லும் பிட்சில் மே.இ.தீவுகள் அணி  இடது கை ஸ்பின்னர் கேரி பியருக்கு 2 ஓவர்களை மட்டுமே கொடுத்து நிறுத்தியது ஏன் என்று புரியவில்லை, ஒரு வேளை  ‘உஷ் கண்டுக்காதீங்க’வாக இருக்கலாம். பவர் ப்ளே முடிந்த போது இந்தியா 50/2 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகும் ஸ்பின்னுக்கே தொடர்ந்து கொடுக்காமல் கிரன் பொலார்ட், கீமோ பால் ஆகியோருக்கு கொடுத்தது, இருவரும் தங்கள் ஓவரில் பவுண்டரி கொடுக்காமல் வீசினாலும் விக்கெட் வீழ்த்தினால்தான் வெற்றி என்ற நிலையில் ஸ்பின்னுக்கு ஏன் கொடுக்கவில்லை என்பது புரியாத புதிர். ப்ராத்வெய்ட் 9வது ஒவரில் 2 பவுண்டரி கொடுத்தார். 10வது ஓவரில் பொலார்ட் ஒரு பவுண்ட்ரி கொடுத்தார், ஆனால் அடுத்ததாக ஒஷேன் தாமஸிடம் கொடுக்க  ரிஷப் பந்த், ஷிகர் தவண் தலா ஒரு சிக்சருடன் அந்த ஓவரை பிரித்து மேய்ந்தனர், ஆட்டம் மாறிப்போனது. கடைசி 10 ஓவர்களில் 106 தேவை எனும்போது 6 ஓவர்கள் ஸ்பின் வீச வாய்ப்பிருந்தும் ஸ்பின் பிட்சில் வேகப்பந்தை பிராத்வெய்ட் தேர்வு செய்தது ஏன்? உஷ் கண்டுக்காதீங்க?  பேபியன் ஆலன் பவுண்டரி இல்லாமல் ஒரு ஓவர் வீசினார், ஆனால் பொலார்டை ரிஷப் பந்து அடுத்த ஓவரில் சாத்தி எடுத்தார்.

ஸ்பின்னை தேர்வு செய்யாததால் பந்த், தவண் இருவரும் போட்டிப் போட்டு ஷாட்களை ஆடினர், ஷிகர் தவண் இன்னொவேஷன் இல்லாமல் ஆட பந்த் ரிவர்ஸ் ஹிட், ஸ்விட்ச் ஹிட் என்று புதிதான ஷாட்களை ஆடி அசத்த இருவரும் சேர்ந்து 13 ஓவர்களில் 130 ரன்களைச் சேர்த்தனர்.  பந்த், 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக ரோஹித் சர்மா, வேகம் குறைக்கப்பட்ட கீமோ பால் பந்தை நேராக மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  கே.எல்.ராகுல் 17 ரன்களில் 4 பவுண்டரிகள் விளாசி ஒஷேன் தாமஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ராம்தினிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

5 ஓவர்கள் ஸ்பின் பவுலிங்கில் 36 ரன்கள்தான் கொடுக்கப்பட்ட நிலையில் கேரி பியருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதும்,  ஃபேபியன் ஆலனுக்கு 3 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதும் ஏன் என்பது புரியாத புதிர்.

முன்னதாக,  ஹோப், ஹெட்மையர் ஒருவழியாக மே.இ.தீவுகளுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். பவர் ப்ளேயில் 51 ரன்கள் வந்தன.  3  ஓவர்கள் ஸ்பின் பவுலிங்கில் 32 ரன்கள் வந்தன.  கடைசி 7 ஓவர்களில் 86 ரன்களை மே.இ.தீவுகள் விளாசியதில் கலீல் அகமெட் கடைசி ஒவரில் 23 ரன்களை வாரி வழங்கினார், இதனையடுத்து மே.இ.தீவுகள் 181/3 என்று நல்ல ஸ்கோரை எட்டியது.

ஆனால் பிராத்வெய்ட்டின் மோசமான கேப்டன்சியினால் இந்தியா 3-0 என்று தொடரை கைப்பற்றியது, ஆட்ட நாயகன் ஷிகர் தவண், தொடர் நாயகன் குல்தீப் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x