Published : 28 Nov 2018 04:44 PM
Last Updated : 28 Nov 2018 04:44 PM

நான் தற்கொலைக்கு முயன்றேன்; என் பிள்ளைகள் விளையாடுவதைக் கூட இனி பார்க்க முடியாது: ஸ்ரீசாந்த் கண்ணீர்

பொய்யான சூதாட்டப்புகார் என் மீது சுமத்தப்பட்டதால் நான் தற்கொலைக்கு முயன்றேன். என் மீது விதிக்கப்பட்டதடையால் என் பிள்ளைகள் விளையாடுவதைக் கூட பார்க்க முடியாது என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சிறீசாந்த் கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது, ஸ்பாட் பிக்ஸிங் குற்றத்தில் ஈடுபட்டதற்காக சிறீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ அமைப்பு.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் 12-வது சீசனில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளர்களுடன் ஸ்ரீசாந்த்பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஐபிஎல் போட்டியில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஸ்ரீசாந்த் தெளிவுபடுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், “ கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நான் ஸ்பாட் பிக்ஸிங் ஈடுபட்டதாக என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. என்னிடம் ரூ.10 லட்சம் கொடுத்து பேரம் பேசியது உண்மைதான் ஆனால், எதற்கும் சம்மதிக்கவில்லை.

ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. எனக்கு ஏற்பட்ட அவமானம், மனஉளைச்சலை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் உச்ச கட்டமாக தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், எனது குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டேன். இது வெளியுலகிற்குத் தெரியாது.

இப்போது கூறுகிறேன் எந்தவகையான ஸ்பாட்பிக்ஸிங், சூதாட்டத்திலும் நான் ஈடுபடவில்லை. நான் செய்யாத குற்றத்துக்காக என் மீது கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துவிட்டது. என் கிரிக்கெட் வாழ்க்கையே அஸ்தமதித்துவிட்டது. .

நான் மட்டுமல்ல என் பிள்ளைகள் எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாடினால்கூட நான் மைதானத்துக்குள் கால் வைக்க முடியாது. என் மகனோ அல்லது மகளோ கிரிக்கெட் விளையாடினால்கூட அதை என்னால் பார்க்க முடியாது” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

ராஜ்குந்த்ராவுக்கு சிறீசாந்த் மனைவி பதிலடி

இதற்கிடையே ஸ்ரீசாந்த்தின் கண்ணீர் பேச்சைக் கேட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ட்விட்டரில் கிண்டல் செய்து ட்வீட் செய்தார். இதற்கு ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஷ்வரி பதிலடி கொடுத்தார். அவர் பதிவிட்ட கருத்தில், “ ராஜ் குந்த்ரா என் கணவர் ஸ்ரீசாந்த்துக்கு இன்னும் சம்பளப்பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். இப்போது என் கணவரை கிண்டல் செய்கிறார். அவருக்கு அந்த அளவுக்குத்தான் துணிவு இருக்கிறது. ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x