Last Updated : 20 Aug, 2014 12:00 AM

 

Published : 20 Aug 2014 12:00 AM
Last Updated : 20 Aug 2014 12:00 AM

என்ன செய்யலாம் இந்த அணியை?

“உங்களுக்கு டெஸ்ட் போட்டியில் ஆட விருப்பமில்லை என்றால் விலகிவிடுங்கள்” – இது முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கரின் கூற்று.

பொதுவாக உணர்ச்சிவசப்படாத சுபாவம் கொண்ட கவாஸ்கரால் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிய லட்சணத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. கவாஸ்கருக்கு ஏன் இவ்வளவு கோபம் வர வேண்டும்? இந்திய அணி இதுவரை இவ்வளவு மோசமாகத் தோற்றதே இல்லையா?

தோற்றதுண்டு. 2011ல் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய அணி படுதோல்விகளைச் சந்தித்தது. ஆனால் டெஸ்ட் போட்டியில் ஆடத் தெரியாத அல்லது அதற்கான மனநிலை இல்லாத அணியாக அது களத்தில் நிற்கவில்லை. இன்றைய அணியில் பலரைப் பார்க்கும்போது இவர்கள் 20 ஓவர் போட்டியின் மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்று தோன்றுகிறது.

களத்தில் நிற்கும் விதம், ஆடும் விதம், டிரைவ்களை அடிக்கும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இவர்கள் மிக வலுவாக 20 ஓவர் போட்டியின் தாக்கத்துக்கு ஆட்பட்டிருப்பது தெரிகிறது. 20 ஓவர் போட்டிகளில் மட்டையின் அடிப்புறத்தில் உள்ள கையை வலுவாகப் பயன்படுத்துவார்கள். அப்போதுதான் பந்துகள் வலுவாகத் தாக்கப்பட்டு பவுண்டரிக்கோ அதைத் தாண்டியோ பறக்கும். முறையான ட்ரைவ் ஆடும்போது மட்டையின் மேலே உள்ள கைதான் அதிகம் செயல்பட வேண்டும்.

அடிப்புறம் உள்ள கையை வலுவாகப் பயன்படுத்தினால் பந்துகள் பறக்கவும் செய்யலாம் விளிம்பில் பட்டுத் தெறிக்கவும் செய்யலாம். 20 ஓவர் போட்டிகளில் விளிம்பு பற்றிய கவலையே தேவையில்லை. ஏனெனில் ஸ்லிப், ஃபார்வேர்ட் ஷார்ட் லெக், லெக் ஸ்லிப் போன்ற கேட்ச் பிடிக்கும் இடங்களில் தடுப்பாளர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் டெஸ்டில் இருப்பார்கள். பந்து விளிம்பில் பட்டாலோ எக்குத் தப்பாகப் பட்டு எகிறினாலோ அதை விழுங்கி ஏப்பம் விடப் பல ஜோடிக் கைகள் மட்டையாளருக்கு அருகில் காத்திருக்கும். எனவே பந்தைப் பறக்கவிடும் உத்தியைக் காட்டிலும் அதை முறையாகச் செலுத்தி ஆடும் உத்தியே டெஸ்டில் எடுபடும். அந்த உத்தியைச் செயல்படுத்த இந்தியாவின் பெரும்பாலான மட்டையாளர்கள் தவறினார்கள்.

கோலி, புஜாராவின் நிச்சயமற்ற அணுகுமுறை

இங்கிலாந்தில் பந்துகள் ஸ்விங் ஆகும் என்பது சிறு பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். ஸ்விங்கை எப்படி ஆடுவது எனபதை விராட் கோலிக்கோ சதீஸ்வர் புஜாராவுக்கோ ஷிகர் தவனுக்கோ யாரும் புதிதாகக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படிக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. சிறிது நேரம் சமாளித்து நின்றுவிட்டால் எவ்வளவு சிறப்பான பந்துவீச்சாக இருந்தாலும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். தொடக்க கட்டத்தைத் தாண்டுவதுதான் முக்கியம். கோலி தொடங்கவே இல்லை என்னும்போது அடுத்த கட்டத்தை பற்றி எப்படி யோசிப்பது?

கோலியும் புஜாராவும் நிச்சயமற்ற அணுகுமுறையோடு பந்துகளை எதிர்கொள்கிறார்கள். புஜாரா பந்தை எதிர்கொள்ளும் போது மட்டையைச் சற்றுத் தாமதமாக எடுத்து வருகிறார் என்றும் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்படும் பந்தை விடுவதிலும் அடிப்பதிலும் கோலி நிச்சயமற்று இருக்கிறார் என்றும் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரிந்து தெளிவாக வெளியே செல்லும் பந்தை அரைகுறை மனதுடன் தவனும் கம்பீரும் தொடுகிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது. இதெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் ஃபிளெட்சருக்குத் தெரியாதா? கோலியும் தவனும் கம்பீரும் புஜாராவும் தாங்கள் அவுட் ஆன விதத்தை வீடியோ பதிவில் பார்க்க மாட்டார்களா? எனில் அதே தவறை அவர்கள் எப்படித் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்?

அசத்திய அஸ்வின்

முன்னிலை மட்டையாளர்கள் செய்யாததை ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தார். புஜாரா, கோலி, தவன், கம்பீர் போன்றவர்கள் கிரீஸுக்குள் நின்று மட்டையை மட்டும் நீட்ட, இவரோ முறையாகக் கால்களை நகர்த்தி ஆடினார். தடுத்து ஆடும்போதோ டிரைவ் செய்யும்போதோ மட்டை தனியாகச் செல்லவே இல்லை.

இந்திய அணியின் வீழ்ச்சிக்கு இங்கிலாந்தின் பந்து வீச்சின் தரமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஸ்லிப்பில் நிற்கும் குக், பிராடும் ஆண்டர்சனும் வீசிய சில பந்துகளைக் கண்டு அசந்துபோய்விட்டாராம். பக்கத்தில் இருக்கும் ஜோ ரூட்டிடம், “இந்தப் பந்தை நாம் எதிர்கொண்டிருந்தாலும் காலிதான்” என்றாராம். ஆனால் அனுபவமற்ற மொயீன் அலியின் சுழல் பந்துக்கும் இந்திய மட்டையாளர்கள் வீழ்ந்ததை என்னவென்று சொல்ல?

உளவியல் ரீதியான தோல்வி

சூழல் கடினமாகும்போது வலுவானவர்களே தாக்குப்பிடிப்பார்கள். பலவீனர்கள் மேலும் பலவீனமடைவார்கள். இந்தியா உளவியல்ரீதியாகத் தோற்றுவிட்டது என்பதே யதார்த்தம். 30 ஓவர்களுக்கு மேல் ஆட முடியவில்லை என்றால் அதற்கு உளவியல்ரீதியான சரணாகதிதான் காரணமாக இருக்க முடியும். கடைசி இன்னிங்ஸில் ஓரளவு தாக்குப் பிடித்த கோலி ஒரு அவுட் ஸ்விங்கரை மிட் விக்கெட்டில் அடிக்க முயன்றார். அதுவும் பின் காலைப் போதிய அளவு நகர்த்தாமலேயே. பந்து ஸ்லிப்பில் கேட்சாக மாறியது.

அவுட் ஸ்விங்கரை அப்படி ஆட வேண்டிய அவசியம் இல்லை என்பது கோலிக்குத் தெரியாதா அல்லது அவுட் ஸ்விங்கரைக் கணிக்கத் தெரியாதா? பதற்றத்துடன் ஆடும்போது இப்படித்தான் நடக்கும். பந்துவீச்சைப் பற்றிப் பேசுவதில் பொருள் இல்லை. அன்னிய மண்ணில் 20 விக்கெட்களை எடுக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லை என்பது பல முறை நிரூபிக்கப்பட்ட விஷயம். லார்ட்ஸில்கூட இங்கிலாந்து மட்டையாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆடியதுதான் கடைசி நாளின் கடைசி 2 கட்டங்களில் 6 விக்கெட்களை வீழ்த்த உதவியது.

சுதாரித்த இங்கிலாந்து

அடுத்த போட்டியில் இங்கிலாந்து சுதாரித்துக்கொண்டது. பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்போடு வீசினார்கள். மட்டையாளர்கள் சவால் போக்கை விடுத்து கவனம் கூட்டினார்கள். இஷாந்த் ஷர்மாவால் ஆட முடியவில்லை. முகம்மது ஷமி கட்டுக்கோப்பில்லாமல் பந்து வீசினார். பங்கஜ் சிங் வீச்சில் குக் கொடுத்த கேட்சை ரவீந்திர ஜடேஜா தவறவிட்டார். ஸ்லிப்பில் வந்த பல கேட்சுகள் விடப்பட்டன. தோனியின் கீப்பிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

விஜய், அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் சொதப்ப ஆரம்பித்தார்கள். ஆபத்தான பந்துகளைக் கவனமாகத் தவிர்த்துவந்த விஜயின் தடுப்பரணை ஊடுருவும் பந்துகளை பிராட் வீசினார். ரஹானே தடுமாறத்துடன் ஆடி அதற்கான விலையைக் கொடுத்தார். புஜாராவும் கோலியும் சுதாரித்துக்கொள்ளவில்லை. நான்காவது ஐந்தாவது போட்டிகளில் சுதாரித்துக்கொள்ள எல்லா வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் எந்தப் பாடத்தையும் கற்காமல் இந்தியா ஆடியது. முன்பைவிட மோசமாகத் தோற்றது.

இனி என்ன செய்யலாம்?

(அலசல்கள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x