Published : 24 Oct 2018 05:40 PM
Last Updated : 24 Oct 2018 05:40 PM

‘கிங்’ கோலி சதம் அடித்து உலக சாதனை: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார்; சச்சினின் 2 சாதனைகளை உடைத்தார்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2-வது போட்டியிலும் சதம் அடித்து, சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் உலக சாதனையைப் படைத்தார்.

9 ஆயிரம் ரன்களில் இருந்து 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு அதாவது ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கோலி 11 இன்னி்ங்ஸ்கள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் அபாரமாகச் சதம் அடிக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். 2-வது போட்டிக்கான விளையாடும் 12 பேர் கொண்ட அணி நேற்றே அறிவிக்கப்பட்டது. முதலாவது போட்டியில் விளையாடிய 12 வீரர்களே எந்தவிதமான மாற்றமுமில்லாமல் அறிவிக்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.ஆனால், தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் இருந்தது. கடந்த போட்டியில் மேற்கந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்த ரோஹித் சர்மா இந்த முறை 4 ரன்கள் சேர்த்த நிலையில் ரோச் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, தவணுடன் இணைந்தார். முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்த ஷிகர் தவண் இந்த ஆட்டத்திலும் சொதப்பினார், 29 ரன்கள் சேர்த்த நிலையில், நர்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். இதனால், 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

ஆனால், 3-வது விக்கெட்டுக்கு வந்த ராயுடு, கோலியுடன் இணைந்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். அதிரடியாக ஆடிய விளையாடிய விராட் கோலி, ஒருநாள் போட்டியில் தனது 49-வது அரைசதத்தை நிறைவு செய்தார். ராயுடு அரைசதம் அடித்த நிலையில் 73 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும்139 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

விராட் கோலி 81 ரன்கள் சேர்த்திருந்த போது ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் அதிகவேகமாகக் கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

விராட் கோலியின் சாதனைகள்.

1. ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை இதுவரை சச்சின்(18,426), ராகுல் டிராவிட்(10,768), கங்குலி(11,221), தோனி(10,123) ஆகிய 3 இந்திய வீரர்கள் மட்டுமே கடந்த நிலையில்,5-வது வீரராக விராட் கோலி இடம் பெற்றார்.

2. உலக அளவில் ஒருநாள போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 13-வது வீரர் எனும் பெருமையை கோலி படைத்தார்.

 

3. சச்சின் தனது 10 ஆயிரம் ரன்களை 259 இன்னிங்ஸில் எட்டிய நிலையில், விராட் கோலி 205-வது இன்னிங்ஸில் எட்டினார். அதுமட்டுமல்லாமல் உலக அளவில் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த வீரர் எனும் பெருமையைப் படைத்தார். சச்சினைக் காட்டிலும் 54 இன்னிங்ஸ்கள் முன்கூட்டியே கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.

4. கங்குலி 10 ஆயிரம் ரன்களை 263 இன்னிங்ஸிலும், தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் 272 இன்னிங்ஸிலும், தோனி 273 இன்னிங்ஸிலும் எட்டினார்கள்.

5. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் சேர்த்த 1,573 ரன்களே இந்திய வீரர் ஒருவரின் அதிபட்சமாகும்.

6. ஆனால், இந்த போட்டியில் விராட் கோலி அந்த சாதனையை முறியடித்து சச்சினை பின்னுக்குதள்ளினார்.

7. விராட் கோலி இந்த போட்டியில் 115 ரன்களை எட்டியபோது, 2018-ம் காலண்டர் ஆண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். ஆயிரம் ரன்களை 11 இன்னிங்ஸி்ல் எட்டியுள்ளார்

8. விராட் கோலி தொடர்ந்து இரு போட்டிகளில் சதம் அடிப்பது 7-வது முறையாகும். அதாவது 14 சதங்களை அடுத்தடுத்து போட்டிகளில் அடித்துள்ளார்.

 

9. விராட் கோலி இப்போட்டியில் சதம் அடித்து தனது 37-வது ஒருநாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். மேலும் அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கிபாண்டிங்கை தோற்கடித்து 3-வது இடத்துக்கு கோலி முன்னேறினார்.

10. விராட் கோலி தவிர இலங்கை வீரர் திலகரத்னே தில்சன், குமார் சங்கக்கரா, சனத் ஜெயசூர்யா, மகிளா ஜெயவர்த்தனா, ரிக்கி பாண்டிங், காலிஸ், பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக் ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x