Published : 04 Oct 2018 09:48 AM
Last Updated : 04 Oct 2018 09:48 AM

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடக்கம்: கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்குகிறார் பிரித்வி ஷா

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. முதன் முறையாக இந்த ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட இறுதி அணியை இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது. இதன்படி தொடக்க வீரராக பிரித்வி ஷா களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 9 மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடிய நிலையில் அந்த அணி களுக்கு எதிரான டெஸ்ட் தொடர் களை இழந்தது. எனினும் நீண்ட வடிவிலான இந்த விளையாட்டில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் 2-வது கட்ட உள்நாட்டு சீசனில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இதன் முதல் ஆட்டம் ராஜ் கோட்டில் இன்று தொடங்குகிறது. வரும் நவம்பர் மாதம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனால் கடினமான அந்தத் தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரை இந்திய அணி வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான தொடக்க வீரர்களான ஷிகர் தவண், முரளி விஜய் ஆகியோர் தற்போதைய தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் கே.எல்.ராகுலுடன், 19 வயதான மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். விளையாடும் லெவனில் அவர், இடம்பெறுவதை இந்திய அணி நிர்வாகம் நேற்று உறுதி செய்தது. முதன்முறையாக டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாகவே 12 பேர் கொண்ட அணியை இந்திய அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதில் பிரித்வி ஷா பெயர் இடம் பெற்றிருந்தது. அதேவேளையில் ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

5 பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்துவீச்சாளர் கள் என்ற கூட்டணியில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வேகப் பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற கலவையுடன் இந்திய அணி களமிறங்கினால் குல்தீப் யாதவ் நீக்கப்படக்கூடும். அதேவேளையில் 2 வேகப்பந்து வீச்சாளர், 3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற கூட்டணியுடன் களமிறங்கும் பட்சத்தில் ஷர்துல் தாக்குர் வெளியே அமரவைக்கப்படுவார். ஹர்திக் பாண்டியா இல்லாததால் அவரது பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் களமிறங்காததால் வேகப் பந்து வீச்சில் மொகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறந்த பங் களிப்பை வழங்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். ஓவல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளை யாடும் இந்திய அணி முழுமையான பலம் கொண்ட அணி இல்லையென் றாலும், அனுபவம் இல்லாத வீரர் களை கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண் டிருப்பதாக கருதப்படுகிறது.

டெஸ்ட் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போதிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் திறன் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் இந்திய மண்ணில் கடும் போட்டியாளராக திகழக்கூடிய அளவுக்கான அனு பவத்தை அவர்கள் கொண்டிருக்கா தது பலவீனமாக உள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களில் 5 பேர் மட்டுமே இதற்கு முன்னர் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச், தனது பாட்டியின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பார்படாஸ் சென்றுள்ளதால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வில்லை.

இது அந்த அணியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தேவேந்திரா பிஷூ, கிரெய்க் பிராத்வெயிட், கெய்ரன் பொவல், ஷனான் கபேரியல் ஆகியோரும் இந்திய மண்ணில் விளையாடி உள்ளனர். எனினும் இவர்களிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு வெளி பட்டது இல்லை. கடைசியாக மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் விளையாடியிருந்தது. இந்தத் தொடருடன்தான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அனுபவம் இல்லாத வீரர் களை கொண்டிருந்த போதிலும் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா மேற்பார்வையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சமீபகாலமாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு லீட்ஸ் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை அதிர்ச்சி கரமான வகையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீழ்த்தியிருந்தது. ஷாய் ஹோப் முதல் இன்னிங்ஸில் 147 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 118 ரன்களும் விளாசி சாத்திய மில்லாத வகையிலான வெற்றியை வசப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய உற்சாகத்தோடு இந்திய டெஸ்ட் தொடரை அணுகு கிறது. இந்தத் தொடருடன் ஸ்டூவர்ட் லா பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதால் தனது அணி வீரர் களிடம் இருந்து உயர்மட்ட செயல் திறனை வெளிக்கொண்டுவர மெனக்கெடக்கூடும். கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியாவை வீழ்த்தியிருந்தது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர்.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், தேவேந்திரா பிஷூ, கிரெய்க் பிராத்வெயிட், ராஸ்டன் சேஸ், ஷேன் டவுரிச், ஷனான் கபேரியல், ஜஹ்மார் ஹேமில்டன், சிம்ரன் ஹெட்மையர், ஷெர்மான் லீவிஸ், கீமோ பால், கெய்ரன் பொவல், ஜோமல் வாரிக்கன்.இளம் அதிரடி வீரர்

சேவாக் அளவுக்கு இல்லாவிட்டாலும் பிரித்வி ஷா தன்னளவில் ஒரு அதிரடி வீரர் என்ற பெயருடன் இன்று களம் காண்கிறார். மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தார். மேலும் மும்பை பள்ளிகளுக்கு இடையிலான போட்டியிலும் ஏராளமான ரன்களைக் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சச்சினை வெகுவாக ஈர்த்திருந்தது.

பிரித்வி ஷா 14 முதல்தர போட்டிகளில் விளையாடி 56.72 சராசரியுடன் 1,418 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 சதங்களும், 5 அரை சதங்களும் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x