Published : 19 Oct 2018 02:40 PM
Last Updated : 19 Oct 2018 02:40 PM

வரலாறு படைப்பாரா விராட் கோலி: சச்சினின் சாதனையை நெருங்கினார், புதிய மைல்கல்லை எட்டுவாரா?

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரை இந்திய அணி 2-0 என்று கைப்பற்றியுள்ளது. வரும் 21-ம்தேதி கவுகாத்தியில் முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. அதற்கான பயிற்சியில் இந்திய வீரர்களும், மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு நாள் போட்டியில் இதுவரை சச்சின் வைத்திருந்த சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஒரு நாள் தொடரில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் தொடரில் சச்சினின் 10 ஆயிரம் ரன்கள் சாதனையை விராட் கோலி எட்டுவதற்கு இன்னும் அவருக்கு 221 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது விராட் கோலி 203 இன்னிங்ஸ்கள் விளையாடி அதில் 9,779 ரன்கள் குவித்துள்ளார். 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு 221 ரன்கள் மட்டுமே தேவை.

5 ஒருநாள் போட்டிகளில் 221 ரன்களுக்கு மேல் விராட் கோலி எடுத்துவிட்டால், குறைந்தபோட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையையும், சச்சினின் சாதனையையும் முறியடிப்பார்.

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் தனது 10 ஆயிரம் ரன்களை 259 இன்னிங்ஸ்களில் எட்டினார், ஆனால், விராட் கோலி 208 இன்னிங்ஸ்களில் எட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 10 ஆயிரம் ரன்கள் சாதனையைத் தவிர்த்து அரைசதங்கள் அடித்தவகையில் விராட் கோலி, இதுவரை 48 அரைசதங்கள் அடித்துள்ளார். இன்னும் 2 அரைசதங்கள் அடித்தால், 50 அரைசதங்கள் அடித்த வீரர் எனும் பெருமையை பெறுவார். தற்போது சதங்கள் அடித்தவரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக அதிகமான சதங்கள் அடித்த வீரர் எனும் இடத்தில் கோலி 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x