Published : 12 Oct 2018 09:26 PM
Last Updated : 12 Oct 2018 09:26 PM

மலையுச்சியிலிருந்து அதலபாதாளத்தில் வீழ்ந்தது போல் இருந்தது: யுவராஜ் சிங்

2011 தோனி தலைமையில் இந்தியா சாம்பியன் ஆன உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங் அந்தத் தொடரில் 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் சாதித்து ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்தார்.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் 5 விக்கெட் என்ற ‘டபுள்’ சாதனையையும் நிகழ்த்தினார் யுவராஜ் சிங்.

இத்தருணங்களில் புகழின் உச்சியிலிருந்த யுவராஜ் சிங் வாழ்க்கையில் இடிபோல் இறங்கியது புற்றுநோய். அதனை தான் எதிர்கொண்ட விதம், அணிக்குள் மீண்டும் நுழைந்தே தீருவது என்ற வைராக்கியம் குறித்து கிரிக்கெட் நெக்ஸ்ட் இணையதளத்தில் அவர் கூறும்போது:

உலகக்கோப்பை 2011 உச்சத்துக்குப் பிறகே கேன்சர் என்ற நோய் என்னுடைய மகிழ்ச்சியை மொத்தமாக அழித்தது. என் வாழ்க்கையில் அது இருண்ட காலம்.

உலகக்கோப்பையை வென்றோம், அதில் நான் தொடர் நாயகன் மலையின் உச்சியில் இருக்கிறேன், கேன்சர் என்றவுடன் அப்படியே அதலபாதாளத்தில் விழுந்தேன். ஆனால் இதுதான் லைஃப், நாம் எதிர்பாராதது நிகழும். இதில் நமக்கு சுயவிருப்பத் தெரிவு என்பது கிடையாது.

இவ்வாறு கூறினார் யுவராஜ் சிங்.

ஆனால் கேன்சரிலிருந்து மன உறுதியுடன் மீண்ட யுவராஜ் 2012-ல் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 மூலம் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்தார். 2017-ல் தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரான 150 ரன்களை எடுத்தார். கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக இதனை சாதித்தார் யுவராஜ்.

தற்போது விஜய் ஹஜாரே டிராபியில் 264 ரன்களை 7 போட்டிகளில் எடுத்துள்ளார் யுவராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x