Last Updated : 18 Aug, 2014 08:58 PM

 

Published : 18 Aug 2014 08:58 PM
Last Updated : 18 Aug 2014 08:58 PM

வெற்றியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மகேலா ஜெயவர்தனே

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றதையடுத்து இந்த டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மகேலா ஜெயவர்தனே வெற்றிப்பெருமித்துடன் ஓய்வு பெற்றார்.

இவர் 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுகிறார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1997ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய ஜெயவர்தனே இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 11,814 ரன்களை 49.84 என்ற சராசரியில் எடுத்துள்ளார் ஜெயவர்தனே.

1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஜெயவர்தனே தன் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்சிலேயே அரைசதம் கண்டார். ஆனால் அது கண்டுகொள்ளப்படவில்லை. காரணம் இலங்கை 952/6 என்ற டெஸ்ட் சாதனை ரன்களை எட்டியதே. சனத் ஜெயசூரியா 340 ரன்களையும் ரோஷன் மகானாமா 225 ரன்களையும் எடுக்க இருவரும் இணைந்து 576 ரன்களைச் சேர்த்து இந்திய பவுலர்கள் கையை ஒடித்தனர். ஆனால் இந்த ஸ்கோர் கேப்டன் சச்சின் டெண்டுல்கரை மிகவும் புண்படுத்தி விட்டது. டிக்ளேர் செய்யாமல் ஆடியது இலங்கை.

தான் விளையாடிய ஒரு மோசமான டெஸ்ட் போட்டி இதுவென்றும் இதில் தான் எடுத்த சதம் எந்தக் காலத்திலும் தனது சிறந்த சதமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது இன்னமும் கூட சச்சினுக்கு நினைவில் இருக்கும்.

ஆனால் இதேபோன்று மட்டமான பிட்ச் ஒன்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மகேலா 374 ரன்களை எடுத்தார். சங்கக்காரா 287 ரன்களை எடுத்து இருவரும் இணைந்து 624 ரன்களைச் சேர்த்து தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சாளர்களை மட்டமான பிட்ச் போட்டு கையை உடைத்தனர்.

மொத்தமாக 34 சதங்கள் 50 அரைசதங்களை எடுத்துள்ளார். 11,814 ரன்களில் இலங்கையில் மட்டைப் பிட்ச்களைப்போட்டு இவர் எடுத்த ரன்கள் 81 டெஸ்ட் போட்டிகளில் 7,167 ரன்கள். எடுத்த சதங்கள் 23, அரைசதங்கள் 34.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசீலாந்து போன்ற உயர்ரக பிட்ச்களில் இவரது ஆட்டம் அவ்வளவாக எடுபடவில்லை என்பதை அவரது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் 16 டெஸ்ட்களில் 969 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய மண்ணில் எடுத்தது 7 டெஸ்ட்களில் 440 ரன்களே 104 அதிகபட்ச ஸ்கோர். சராசரி 31.42.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் 1782 ரன்களை 57.48 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்க மண்ணில் அதற்கு நேர் மாறாக 8 டெஸ்ட் போட்டிகளில் 446 ரன்களை 27 ரன்கள் என்ற சராசரியில் பெற்றுள்ளார். அங்கு விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே. விராட் கோலி கூட போனவுடன் ஒரு சதம் எடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசீலாந்துக்கு எதிராகவும் இதே கதைதான். 13 டெஸ்ட் போட்டிகளில் 1028 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 48.95. ஆனால் நியூசிலாந்து மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் 194 ரன்களே.

இங்கிலாந்துக்கு எதிராக 23 டெஸ்ட் போட்டிகளில் 2212 ரன்கள்; அதிகபட்ச ரன்: 213 நாட் அவுட். சராசரி 58. இதில் 8 சதங்கள் 10 அரைசதங்கள். ஆனால் இங்கிலாந்து மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகளில் 788 ரன்களே. சராசரி 35.81. 2 சதங்கள் 4 அரைசதங்கள்.

11,814 ரன்களில் ஒத்த தன்மையுடைய ஆசிய பிட்ச்களில் மட்டும் 109 டெஸ்ட் போட்டிகளில் 9399 ரன்களை எடுத்துள்ளார் மகேலா ஜெயவர்தனே.

இலங்கைக்கு இவர் ஒரு அரிய பொக்கிஷமாக இருக்கலாம். ஆனால் இவர் எடுத்துள்ள ரன்களை வைத்து இவரை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்கள் வரிசையில் சேர்க்க முடியுமா என்பது சந்தேகமே.

அதாவது சச்சின், லாரா, திராவிட், லஷ்மண், சேவாக், காலிஸ், பாண்டிங், சங்கக்காரா, கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்களின் ‘கிளாஸ்’ உடன் இணைத்து ஜெயவர்தனேயைப் பேச முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் இவர் எடுத்துள்ள 11,000-த்திற்கும் மேலான ரன்கள் இவரை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம் என்ற சபலத்தை இலங்கை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x