Last Updated : 14 Oct, 2018 03:09 PM

 

Published : 14 Oct 2018 03:09 PM
Last Updated : 14 Oct 2018 03:09 PM

ஹைதராபாத் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை காப்பாற்றும் விநாயகர்; தோனியும் கும்பிடுவார்: சுவாரஸ்யத் தகவல்

வாழ்க்கையில் துயரம் வரும்போது கடவுளை வேண்டினால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. அது விளையாட்டிலும் சில வேளைகளில் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றபடி நடப்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், உண்மைதான், ஹைதராபாத்தில் உப்பால் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றத்துக்கு பின்புதான் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்தது என்று சொல்வதை நம்பமுடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும்.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களில் எல்லாம் இந்திய அணி தொடர்ந்து தோல்வியைத் தழுவிவந்தது.ஆனால், 2010-ம் ஆண்டு மைதானத்தை ஆய்வு செய்து பார்த்த வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் அரங்கில் ஒரு விநாயகர் கோயில் கட்டினால் வாஸ்து தோஷம் நீங்கும், இந்திய அணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மைதான அரங்கில் சிறியவிநாயகர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் அதாவது 2010-ம் ஆண்டுக்குப்பின் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால், தற்போது நடந்து வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று அரங்க பராமரிப்பாளர்கள், மைதான பராமரிப்பாளர்கள், ரசிகர்கள், அந்தக் கோயிலின் அர்ச்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

ராஜீவ்காந்தி மைதான அரங்கில் இருக்கும் விநாயகர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஹனுமந்த் சர்மா கூறுகையில், இந்தக் கோயில் 2011-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் கட்டப்பட்டபின், உள்நாட்டு அணியைத் தவிர வேறு எந்த அணியும் வென்றதில்லை. அதாவது, இந்திய அணியும், ஐபிஎல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் 2011-ம்ஆண்டுக்குபின் இந்த மைதானத்தில் தோற்றதில்லை.

உள்நாட்டு அணிகளுக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானதாகக் கருதப்படுகிறது. வாஸ்து தோஷம் இந்த மைதானத்தில் இருந்ததால், அதை நிவர்த்தி செய்ய இந்த விநாயகர் கோயில் கட்டப்பட்டது. வாஸ்துசாஸ்திரங்களுக்கு குரு விநாயகர் என்பதால், இங்குக் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் கட்டப்பட்டபின் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. தோனி இந்த மைதானத்தில் விளையாட வரும்போது, இந்தக் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தபின் பயிற்சிக்கும் செல்வார், விளையாடவும் செல்வார். சந்தேகமிருந்தால், வரலாற்றைப் பார்த்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

புள்ளிவிவரங்கள்

இந்த மைதானத்தில் முதல்முறையாகக் கடந்த 2005-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

2007-ம் ஆண்டிலும், 2009-ம் ஆண்டிலும் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. ஆனால், 2011-ம் ஆண்டுக்குப்பின் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது.

2010-ம் ஆண்டு இந்த மைதானத்தில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது.

2012-ம் ஆண்டு, ஆகஸ்ட் (23-26) மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை இன்னிங்ஸ்115 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வென்றது.

2013-ம் ஆண்டு, மார்ச்(2-5) மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வாகை சூடியது

2017-ம் ஆண்டு பிப்ரவரிமாதம்(9-13) வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்,208 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை 2005, 2007, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் இந்திய அணி தோற்றது. ஆனால், 2011-ம் ஆண்டுக்குப்பின் நடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது.

2011, அக்டோபர்1 14-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 126 ரன்கள் வித்தியாசத்திலும், 2014, நவம்பர் 9-ம்தேதி இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x