Published : 12 Oct 2018 03:00 PM
Last Updated : 12 Oct 2018 03:00 PM

சரிவிலும் பிரமாதமாக ஆடும் ராஸ்டன் சேஸ்: மே.இ.தீவுகள் 197/6

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் மே.இ.தீவுகள் அணி தேநீர் இடைவேளையின் போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.

ராஸ்டன் சேஸ் மீண்டும் ஒரு அபாரமான இன்னிங்ஸில் 50 ரன்கள் எடுத்தும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்தும் கிரீசில் உள்ளனர்.

இந்திய அணியில் ஷமிக்கு பதில் வந்த ஷர்துல் தாக்கூர் 1.4 ஓவர்கள் வீசி 9 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினார். இது என்ன செலக்‌ஷன்? 2 ஓவர்கள் கூட வீச முடியாதவரை எப்படித் தேர்ந்தெடுத்தார்களாம்? ஆசியக் கோப்பையிலிருந்து வரும்போதே அவர் காயமடைந்துதான் இருந்தார். குணமடைந்தாரா இல்லையா என்பது தெரிந்தா அல்லது தெரியாமலா இந்தத் தேர்வு.உஷ்! கண்டுக்காதீங்க!

உமேஷ் யாதவ்வை உட்கார வைத்து உட்கார வைத்து அணியில் எடுப்பதால் அவரது ரிதமும் பாதிப்படைந்தது. கெய்ரன் போவெல் தனது கடந்த டெஸ்ட் போட்டியின் ஆக்ரோஷ வழியையே கடைபிடித்தார். அஸ்வினை மேலேறி வந்து தூக்கினார், 30 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினை மீண்டும் மேலே வந்து தூக்க நினைத்தார் அஸ்வின் தன் லெந்தைக் குறைத்தார், கொஞ்சம் வைடாகவும் சென்றது போவெல் ஷாட் நேராகக் கவரில் ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது. போவெல் இன்னிங்சில் 4 பவுண்டரிகள் அடங்கும். அஸ்வின், குல்தீப் யாதவ் டைட்டாக வைத்திருந்தனர் அஸ்வின் 10 ஓவர்களில் 7 ரன்களையே கொடுத்திருந்தார்.

முதல் ஓவரிலேயே 8 ரன்கள் எடுத்த பிராத்வெய்ட், பிறகு 68 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தை பின் காலில் வாங்கி எல்.பி.ஆகி ரிவியூவையும் காலி செய்து விட்டுச் சென்றார். ஷேய் ஹோப் மிகப்பிரமாதமாக குல்தீப் யாதவ்வை ஒரு எக்ஸ்ட்ரா கவர் ட்ரைவ் பவுண்டரி அடித்து 5 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து பழைய பந்தில் ரிதத்தைக் கண்டுபிடித்துக் கொண்ட உமேஷ் யாதவ்வின் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், இவரும் ரிவியூவை வேஸ்ட் செய்து வெளியேறினார். ஹெட்மையர் 12 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்து ஒன்று வெளியே செல்லும் பந்து என்று நினைத்து ஆடாமல் விட பந்து உள்ளே வந்து கால்காப்பைத் தாக்கியது. ஆடாமல் இருந்ததால் எல்.பி.அவுட்.

சுனில் அம்ப்ரிஸ் 26 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து மீண்டும் தூக்கி அடிக்க நினைத்து ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி குல்தீப்பிடம் வெளியேறினார்.

ஷேன் டவ்ரிச், பிட்சில் ஒன்றுமில்லை.. மோசமான பந்துகளை அடித்து, நல்ல பந்துகளை தடுத்து ஆட முடியும் என்று நிரூபித்தார். அவர் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்களெடுத்து உமேஷ் யாதவ்வின் ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்.பி.ஆனார். உமேஷ் 2 விக்கெட்டுகள்.

ராஸ்டன் சேஸ் மிகப்பிரமாதமாக எந்த ஒரு பிரச்சினையும் இன்றி பவுலர்களை எதிர்கொண்டு தற்போது 62 ரன்களுடன் ஆடி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x