Published : 25 Oct 2018 04:13 PM
Last Updated : 25 Oct 2018 04:13 PM

இரு போட்டிகளிலும் மே.இ.தீவுகள் 300க்கு மேல் அடித்ததால் புவனேஷ்வர் குமார், பும்ராவுக்கு அழைப்பு: மீதிப் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

 

மேற்கிந்தியத்தீவுகள அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான 14 வீரர்கள் மட்டும் கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தனர். அதில் டெஸ்ட் போட்டியில் மட்டும் வாய்ப்பு பெற்று வந்த ரிஷப் பந்த் வாய்ப்பு பெற்று இருந்தார். மேலும் ஒரு ஆண்டு இடைவெளியில் உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றார். ஷர்துல் தாக்கூர் காயத்தால் அவதிப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், விசாகப்பட்டிணத்தில் நேற்று நடந்த 2-வது போட்டி டையில் முடிந்தது.

இதையடுத்து, அடுத்த 3 போட்டிகளுக்கான வீரர்களைத் தேர்வு செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில்(பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது. அதில் முகமது ஷமி மீதமுள்ள 3 போட்டிகளுக்கும் நீக்கப்பட்டுள்ளார். ஆசியக் கோப்பைப் போட்டிக்குப் பின் ஓய்வில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், தியோதர் டிராபியில் சிறப்பாக பேட் செய்து வரும் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு மீதமுள்ள 3 போட்டிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

3-வது ஒருநாள் போட்டி 27-ம் தேதி புனேயிலும், 4-வது போட்டி 29-ம் தேதி மும்பையிலும், 5-வது மற்றும் கடைசிப் போட்டி நவம்பர் 1-ம் தேதி திருவனந்தபுரத்திலும் போட்டிகள் நடக்கின்றன. அனைத்துப் போட்டிகளும் பகலிரவு போட்டிகளாக நடக்கின்றன.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, எம்எஸ் தோனி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ்,, கலீல் அகமது, ராகுல், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x