Published : 01 Aug 2018 02:01 PM
Last Updated : 01 Aug 2018 02:01 PM

டி20 போட்டி: ரஸல் அதிரடி ஆட்டம்; வங்கதேசத்தை விரட்டியது மே.இ.தீவுகள்

ஆன்ட்ரூ ரஸலின் அதிரடி பேட்டிங், வில்லியம்ஸின் பந்துவீச்சு ஆகியவற்றால், செயின்ட் கிட்ஸ் நகரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி உள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வங்கதேசம் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் வென்ற நிலையில், ஒரு நாள் தொடரை வங்கதேசம் வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது.

செயின்ட் கிட்ஸ் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ராம்தின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 9விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கு மேற்கிந்தியத்தீவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் நீண்டநேரம் தடைப்பட்டது.

இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு, 11 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 9.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணியின் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். மேற்கிந்தியத்தீவுகள் சுழற்பந்துவீச்சாளர் நர்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே இக்பால், சர்க்கார் இருவரும் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர். இதனால், முதல் ஓவரிலேயே வங்கதேசம் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல் அதன்பின் வந்த வீரர்களும் நிலைத்து ஆடாமல் விரைவாக ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மகமதுல்லா 35 ரன்கள் சேர்த்தார். லிட்டன் தாஸ்(24), முஸ்பிகுர் ரஹிம்(15), கேப்டன் சகிப் அல் ஹசன்(19), ஆரிபுல் ஹக்(11) என குறைவான ஸ்கோரில் வெளியேறினார்கள்.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் வில்லியம்ஸ் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், பால், நர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதன்பின் மழை குறுக்கிட்டு 90 நிமிடங்கள் தடைப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு மாற்றப்பட்டு 11 ஓவர்களில் 91 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் பிளெட்சர், லீவிஸ் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு வங்கதேச அணியினரும் வேகப்பந்துவீச்சில் பதிலடி கொடுத்து தொடக்கத்திலேயே 10 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினார்கள். பிளெட்சர் 7 ரன்னிலும், லீவிஸ் 2 ரன்னிலும் முஸ்தபிஜுர் பந்துவீச்சில் வெளியேறினார்கள்.

3-வது விக்கெட்டுக்கு ரஸல், சாமுவேல்ஸ் கூட்டணி அணியை மீட்டெடுத்தது. இருவரும் அதிரடியாக ஆடி, வங்கதேச பந்துவீச்சை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டனர். 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த சாமுவேல்ஸ் ருபெல் ஹீசைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இவர் கணக்கில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். இருவரும் சேர்ந்து 42 சேர்த்தனர்.

அடுத்து களமிறங்கிய ரோவ்மென் பாவெல், ரஸலுடன் இணைந்தார். இருவரும் காட்டடி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரஸல் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடங்கும். பாவெல் 2 சிக்ஸர்கள் உள்ளிட்ட 15 ரன்கள் சேர்த்தார். 9.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x